போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்
போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 304, விலை 200ரூ.
போதி தர்மர் பற்றிய விவரங்களைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள அற்புதமான நூல். தமிழகத்தில் ஆன்மிக அறிவு பெற்று, அதனை சீனாவில் முழுமையாக அதாவது ‘சென்’மதக் கோட்பாட்டை உருவாக்கியவர் என்ற பெருமை படைத்தவர் போதிதர்மர். ஆன்மிகப் போதனைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற முதல் இந்திய ஞானி இவர். நோக்கு வர்மக் கலையின் முன்னோடி, கராத்தே என இப்போது பிரபலமாகியுள்ள தற்காப்புக் கலையின் தந்தை, சிறந்த மருத்துவ அறிஞர், அக்குபஞ்சர் என்ற சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர், உடல் உறுப்புகள் தானம் குறித்து மருத்துவ அறிவின் முன்னோடி என அறியப்பட்டவர் இவர். இவைதவிர, மூலிகை தேயிலையையும், சுவரை உற்றுநோக்கும் தியான முறையையும் அறிமுகப்படுத்தியவர். உண்மையை மட்டுமே வெளிப்படுத்தும் போதிதர்மர், சீனர்களின் கடவுளாகச் சித்திரிக்கப்படுகிறார் என நூலசிரியர் உதாரணத்துடன் விளக்கியிருப்பது அருமை. அவர் தனது பூத உடைலைத் துறந்து உயிர்தெழுந்தபோது, புதைகுழியில் தனது ஒரு செருப்பை விட்டுச் சென்றது தெரியவந்தது. போதிதர்மர் அணிந்திருந்த அதே மாதிரி பாதணியைத்தான் வடிவமைத்து உலகம் முழுவதும் உள்ள சென் மதத்துறவிகள் இன்று அணிகின்றனர். மேலும் சென் பரவியுள்ள நாடுகளில் உள்ள வீடுகளில் பாதணியைத் தொங்கவிடும் சம்பிரதாய வழக்கு இன்றும் இருக்கிறது. அதைப் புனிதமாகவே கருதுகிறார்கள். 3 பாகமாகப் பிரசுரமாகியுள்ள 32 கட்டுரைகளும் மிக அருமை. நன்றி: தினமணி, 17/11/2014.