மணப்பேறும் மகப்பேறும்
மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசௌந்தரி, இந்திய மருத்துவ மையம், சென்னை, பக். 1217, விலை 1000ரூ.
இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1990இல் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தப் புத்தகம் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியரும் மகப்பேறு நிபுணருமான டாக்டர் ஞான சௌந்தரியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஓர் அனுபவமே இந்த நூலை எழுதுவதற்கு முக்கிய காரணம். அவரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இரண்டு பிரசவத்திலும் பெண் குழந்தைகளே பிறந்தன. மூன்றாவது பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண், டாக்டரின் கைகளைப் பற்றிக் கொண்டு, ஒன்று இந்த அறையில் இருந்து ஆண் குழந்தையுடன் வெளியே செல்ல வேண்டும். இல்லை என் பிணம்தான் வெளியே செல்ல வேண்டும் என்று கூறி அழுதிருக்கிறார். அவரின் கணவரும் இதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதும், பெண்ணாகப் பிறப்பதும் ஆணின் விந்தணுவில்தானே இருக்கிறது? இதற்கு ஒரு பெண் என்ன செய்ய முடியும்? எனவே ஒரு பெண்ணின் வாழக்கையில் மணப்பேறு முதல் கர்ப்ப காலம், மகப்பேறுக்கு பின் பராமரிப்பு, கருத்தடை, மாதவிலக்கு முற்றுகின்ற பருவம், முதுமை காலம் என அனைத்திலும் உள்ள அறிவியல் உண்மைகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை எழுதியுள்ளார். அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழி நடையில் இருப்பது சிறப்பு. மொத்தம் 60 தலைப்புகளில் பெண்ணின் பல்வேறு உடல் நிலைகளையும் அதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், மாற்றங்கள் குறித்தும் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்கள் முன்னேற்றம் கண்டாலும், வாழ்க்கையின் அடிப்படையான தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கு இதுபோன்றதொரு நூல் மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு தம்பதியரின் கையிலும் தவழ வேண்டிய புத்தகம் இது. நன்றி: தினமணி, 2/2/2015.