ஸ்ரீஹரிவம்சம்
ஸ்ரீஹரிவம்சம், எல்.லக்ஷ்மி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை, பக். 320, விலை 250ரூ.
வைசம்பாயனரிடமிருந்து மகாபாரதத்தின் 18 பர்வங்களையும் பாராயணம் (ஸ்ரவணம்) செய்த பிறகு ஜனமேஜமன்னன், பரமாத்மாவின் வம்சத்தில் வந்த அரசர்களின் வைபவங்களைக் கேட்க ஆர்வம் எழுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் கதையை இன்னும் விஸ்தாரமாகக் கேட்க வேண்டும் என்ற தாகம் எழுகிறது. கருணை புரிந்து அவற்றைச் சொல்ல வேண்டும் என்று அவரைக் கேட்க, வைசம்பாயனர் ஸ்ரீஹரியின் வம்சத்தில் வந்த ராஜாக்களின் வரலாறுகளைக் கூறத் தொடங்குகிறார். மகாபாரதத்தின் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களுடன் ஹரிவம்ஸ பர்வம், விஷ்ணு பர்வம், பவிஷ்ய பர்வம் ஆகிய மூன்று உப பர்வங்களைக் கொண்ட பகுதியே ஹரிவம்சம் என்றழைக்கப்பட்டு, மகாபாரதத்தின் கில (அனுபந்தம் – மீதமுள்ள) பாகமாக அமைந்துள்ளது. மகாபாரதத்தில் சொல்லப்படாத சில அபூர்வச் சம்பவங்கள் ஹரிவம்சத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது பாரம்? பிரளயத்தை நேரில் கண்டவர் உண்டா? மகனின் சொத்தை, தந்தை அனுபவிக்கலாமா? தகுதிக்கு மீறி ஆசைப்படலாமா? பலாத்காரத்திற்கு உள்ளான ஓர் அபலைப் பெண்ணை சமூகம் எப்படி நடத்த வேண்டும்? என்பன போன்ற வினாக்களுக்கு இந்நூலில் விடை உள்ளது. 43 தலைப்புகளில் வியக்கவைக்கும் பல கதைகள் உள்ளன. ஹரிவம்சத்தைப் பாராயணம் செய்தால் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன் கிடைக்கும். இதைப் படித்தால் 18 புராணங்களைப் படித்த பலன் உண்டு. புத்திர பாக்கியம் வேண்டுவோர், பாலஹத்யாதி தோஷங்களுக்குப் பரிகாரம் வேண்டுவோர், கிடைத்த சந்ததி நல்ல சந்ததியாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் இந்த ஹரிவம்சத்தை விதிமுறைகளுடன் பாராயணம் செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்று ஹரிவம்சத்திலேயே இதைப் படிப்பதன் பயன் கூறப்பட்டிருக்கிறது. இவை தவிர ஞானம், புத்தி, ஆயுள், ஆராக்கியம், ஐஸ்வர்யம், கீர்த்தி முதலிய அனைத்தையும் அருளும் என்ற குறிப்பும் உள்ளது. படிக்கத் தவறாதீர்கள். நன்றி: தினமணி, 3/8/2015.‘