100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்
100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், பக்.116, விலை 100ரூ.
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சார்பியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்ததற்குப் பின்பு அறிவியல் உலகில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களை மிக எளியமுறையில் இந்நூல் விவரிக்கிறது.
ஆகாயத்துக்கும் வடிவக் கட்டமைப்பு உண்டு; ஒருவர் எங்கேயிருக்கிறார் என்பதைப் பொறுத்து காலம் மெதுவாகவும், வேகமாகவும் நகரும்; ஒளி துகள்களால் ஆனது; ஆற்றலும் பொருளும் வேறு வேறானவை அல்ல.
இரண்டும் ஒன்றே. பொருள் ஆற்றலாக மாறும். ஆற்றல் பொருளாக மாறும்; இவைதான் ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்புகள். நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக் கண்டுபிடிப்பை மறுபரிசீலனை செய்ய வைத்தன ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்புகள். இவ்வாறு அறிவியல் சார்ந்து இந்நூல் எழுதப்பட்டிருப்பினும், ஐன்ஸ்டினின் சொந்த வாழ்க்கை பற்றிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன.
செஸ் உட்பட எந்தவித பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஐன்ஸ்டினுக்குப் பிடிக்காமலிருந்தது, முதல் மனைவியுடன் சேர்ந்து வாழமுடியாமல் விவாகரத்துப் பெற்றது, ஐன்ஸ்டின் இறந்த பிறகு பாதுகாக்கப்பட்ட அவருடைய மூளையை ஆராய்ச்சி செய்து பார்த்தபோது, அதிகம் பயன்படுத்தப்பட்ட ஐன்ஸ்டினின் மூளையில் அதிக கிளியல் திசுக்கள் இருந்தது, நரம்பு செல்களின் பின்னல் இணைப்புகள் ஐன்ஸ்டினின் மூளையில் அதிகமாக இருந்தது ஆகியவை வியப்பூட்டுகின்றன.
அறிவியலில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இந்நூல் ஒரு விருந்து என்றால் அது மிகையில்லை
நன்றி: தினமணி, 13/11/2017.