2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம், (தொல்லியல் நோக்கில் சங்ககால நில வரைபடம்), சி. இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக். 160, விலை 120ரூ.

இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடு இருக்கும் தெருவரை நில வரைபடத்தில் (ஙஅட) வந்துவிட்டது. மின்சாரமோ, போக்குவரத்து வசதியோ இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் நிலவரைபடம் இருப்பதற்கான சாத்தியம் அறவே இல்லை.

எனினும், அக்காலத்தில் வணிகம் நடைபெற்றிருக்கிறது. ரோமிலிருந்து முசிறி துறைமுகம் வரை வந்து வணிகம் செய்திருக்கிறார்கள்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் நில வரைபடத்தை பழந்தமிழ் இலக்கிய நூல்களில் காணப்படும் செய்திகளின் அடிப்படையில் இந்நூலாசிரியர் உருவாக்கியிருக்கிறார்.

“வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில்’ உள்ள வேங்கடமலை, பழனிமலை, பறம்புமலை (பிரான்மலை), கொல்லி மலை, ஜவ்வாது மலை ஆகியவற்றைப் பற்றியும் அவற்றைச் சுற்றியுள்ள ஊர்கள் பற்றியும் சங்க இலக்கியத்தில் கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவற்றுக்கான நில வரைபடங்களை உருவாக்கியுள்ளார்.

இவை தவிர, காவிரிப்பூம்பட்டினம், மருங்கூர் பட்டினம், உறையூர் கருவூர் (கரூர்), கொடுமணல், கூடல்நகர் (மதுரை), காஞ்சிபுரம் முதலிய ஊர்களையும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் நில வரை படங்களையும் ஆசிரியர் உருவாக்கியுள்ளார். கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்களின் நில வரைபடமும் உள்ளது.
இலக்கியங்களில் இருந்து கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் நில வரைபடங்களை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களையும் ஆராய்ந்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தது, பழனி மலை சங்ககாலத்தில் பொதினி மலை என்று குறிப்பிடப்பட்டது, வேளிர் நன்னனின் செங்கண்மா இன்று செங்கம் என்ற பெயரில் அழைக்கப்படுவது உள்ளிட்ட சுவையான வரலாற்றுத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன. போற்றத் தக்க அரிய முயற்சி.

நன்றி: தினமணி, 27/2/3017.

Leave a Reply

Your email address will not be published.