தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை, சு. சீனிவாசன், அறிவில் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, பக். 264, விலை 250ரூ.

இன்றைய சூழலில் கணினி நம் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆயினும் தமிழ்வழிக் கல்வி கற்ற ஒருவர் கணினிகளை எங்ஙனம் இயக்க இயலும் என்பதும், மொழி குறித்த ஆய்வுக்கு கணினி எவ்வகையில் துணைபுரியும் என்பதும் நீண்ட நாள்களாக நிலவிவரும் ஐயங்களாக இருக்கின்றன. இந்தப் பொருண்மையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே உள்ளன. தமிழில் மிக மிகக் குறைவு. இந்நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடான இந்நூல், அந்தக் குறையைப் போக்குகிறது என்று கூறலாம்.

நூலாசிரியர் தமிழ்மொழியின் கட்டமைப்பை எழுத்து, வரிவடிவம், சொல், சொற்றொடர், ஒலி ஆகிய பண்புகளின் அடிப்படையில் நுட்பமாக ஆராய்ந்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குடையதாக விளங்கும் தமிழ்மொழியில் உள்ள நூற்பகுதிகள் சில ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டனவா அல்லது பலர் எழுதியதன் தொகுப்பா என்கிற சிந்தனை அறிஞர்களுக்கே கூட ஏற்படுவதுண்டு. அதற்கு விடை காண்பது அத்தனை எளிதல்லவெனினும், நூலாசிரியரை இனங்காண, எழுத்துறவு கணித முறை உதவுவதாகவும் சிறுகதைகளின் நடையியல் பண்பை மதிப்பிட வாக்கிய நீளம் ஒரு காரணியாக உதவுகிறது என்றும் ஆசிரியர் கூறுகிறார்.

குறிப்பாக, செய்யுள் நடையில் உள்ள இலக்கியங்களுக்கு நூலாசிரியரை அடையாளம் காண மார்க்கோவ் செய்முறை நூலாசிரியரின் “விரல் பதிவாக’ செயல்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.

இதன்மூலம், நாலடியார் பலரால் எழுதப்பட்ட நூலா? கம்பராமாயணத்தில் கம்பர் எழுதாமல் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்ட பாடல்கள் எவையெவை? என்பன போன்ற வினாக்களுக்கு விடை கிட்டும்.

பொதுவாக தமிழில் பழந்தமிழ் இலக்கியங்களை புதிய கண்ணோட்டத்தில் நோக்குவது என்பதைத் தாண்டி அண்மைக்காலம் வரை வளரவில்லை. இந்நூல், மொழியை அறிவியலின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்பதை நிறுவியிருக்கிறது. மொழி ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, மொழி அறிஞர்களுக்கே உதவக்கூடிய நூல் இது.

நன்றி: தினமணி, 27/2/3017.

Leave a Reply

Your email address will not be published.