2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்
2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்
சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமையான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் இன்று இலக்கியம், அரசியல், பொருளியல் என எல்லா தளங்களிலும் நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன். பத்து என்ற கணக்கு வைத்திருப்பதனால் பல நூல்களைச் சேர்க்க முடியவில்லை. நாஞ்சில் நாடனின் ‘பனுவல் போற்றுதும்’, பவா செல்லதுரையின் ‘எல்லா நாளும் கார்த்திகை’ போன்று முக்கியமான பல நூல்கள் உள்ளன…
1. ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை – செவ்வியல் அரசியல் பொருளாதாரம், எஸ். நீலகண்டன், வெளியீடு: காலச்சுவடு, விலை ரூ. 250 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-505-3.html
நாம் விவாதிப்பதில் பெரும் பகுதி அரசியல்தான். ஆனால் அரசியல் பிரச்னைகள் அனைத்துக்கும் உள்ளடக்கம் பொருளியல். பொருளியலின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நம்மால் பொருளியல் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியாது. நவீன பொருளியலின் அடிப்படைகளை வரலாற்று நோக்குடன் விளக்கும் நூல். பாடப் புத்தகத் தன்மையோ விளையாட்டுத் தன்மையோ இல்லாமல் சுவாரசியமாக விளக்கும் நூல்.
2. அயல் மகரந்தச் சேர்க்கை, ஜி. குப்புசாமி, வெளியீடு: வம்சி, விலை ரூ. 200
சமகால உலக இலக்கியப்போக்கு பற்றிய புரிதல் நம் இலக்கியத்தை மதிப்பிடுவதற்கு மிகவும் முக்கியமானது. தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜி. குப்புசாமி, சமகாலப் படைப்புகள், சமகாலத்தில் பேசப்படும் சென்ற தலைமுறை படைப்புகள் என பத்து எழுத்தாளர்களுடைய கதைகளை மொழியாக்கம் செய்து அவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அவர்களின் பேட்டியும் உள்ளது.
3. பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே, முனைவர் துளசி. இராமசாமி, வெளியீடு: விழிகள், விலை ரூ. 700
சங்க இலக்கியம் சார்ந்த அசலான ஆய்வுகள் அருகி வரும் காலகட்டம் இது. துளசி. இராமசாமியின் இந்த பெரிய ஆய்வு நூல், சங்க இலக்கியங்கள் பற்றிய ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைக்கிறது. சங்கப் பாடல்கள் எல்லாம் வாய்மொழியாக வழங்கிய நாட்டார் பாடல்கள் என்றும், அவை பின்னாளில் சமண முனிவர்களால் எழுதி தொகுக்கப்பட்டன என்றும் அவர் சொல்கிறார். அவற்றில் உள்ள வரலாற்றுக் குறிப்புகள் பின்னாளில் நுழைக்கப்பட்டவை என்றும் திணை, துறை முதலிய இலக்கணக் குறிப்புகள் மட்டுமல்லாது, எழுதியவர்களின் பெயர்கள் கூட பிற்காலச் சேர்க்கைகளே என்றும் வாதிடுகிறார்.
4. அசடன், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: எம்.ஏ. சுசீலா, வெளியீடு: பாரதி பதிப்பகம், விலை ரூ. 600 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-6.html
தமிழில் வந்துள்ள உலக இலக்கியம் இது. தஸ்தயேவ்ஸ்கியின் இந்நாவல் உலகமெங்கும் ஒரு நூற்றாண்டாக ஆழ்ந்து விவாதிக்கப்பட்ட ஒன்று. ‘களங்கமின்மையே அறிவை விட ஆன்மிகமானது’ எனக் கூறும் பெரும் படைப்பு. இப்போதுதான் தமிழில் வெளிவந்துள்ளது.
5. 6174, க.சுதாகர், வெளியீடு: வம்சி, விலை ரூ. 300 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-6.html
தமிழில் அறிவியலை கருவாகக் கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும் நாவல்கள் எழுதப்பட்டதில்லை. மர்ம நாவல்களில் அறிவியல் கையாளப்பட்டிருப்பதை இலக்கிய வகைக்குள் சேர்க்க முடியாது. இது தமிழின் முதல் அறிவியல் புனைவு நாவல்.
6. பயணக்கதை, யுவன் சந்திரசேகர், வெளியீடு: காலச்சுவடு, விலை ரூ. 290
தனித் தனிக் கதைகளின் தொகுதியாக தன் நாவல்களை எழுதுபவர் நவீன எழுத்தாளரான யுவன் சந்திரசேகர். அவரது இந்நாவல் வெவ்வேறு பயணங்களை சித்தரிக்கிறது. அவற்றுக்குள் ஓடும் பொதுச்சரடு வழியாக ஒரு முழுமையை உருவாக்குகிறது. சுவாரசியமான, ஆழமான நாவல்.
7. வாசக பர்வம், எஸ். ராமகிருஷ்ணன், வெளியீடு: உயிர்மை, விலை ரூ. 110 To buy this Tamil book online – www.nhm.in/img/100-00-0000-018-5_b.jpg
எழுத்துக்களைப் போலவே எழுத்தாளர்களும் முக்கியமானவர்கள். எழுத்து எழுத்தாளனின் ஒரு தோற்றம் மட்டுமே என்றுகூடச் சொல்லலாம். ஆகவேதான் உலகமெங்கும் எப்படி இலக்கியம் பேசப்படுகிறதோ அப்படி இலக்கியவாதிகளின் வாழ்க்கையும் பேசப்படுகிறது. பெரும்பாலும் அவற்றை பிற எழுத்தாளர்கள்தான் எழுதியிருக்கிறார்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக் குறிப்புகள் தமிழிலக்கியம் என்ற அமைப்பின் சென்ற அரை நூற்றாண்டு சலனத்தை மட்டுமல்ல… தமிழ் அறிவுலகின் அலைகளையும் காட்டக்கூடியவை.
8. பட்சியின் சரிதம், இளங்கோ கிருஷ்ணன், வெளியீடு: காலச்சுவடு, விலை ரூ. 55
தமிழ் நவீனக் கவிதை படிமங்களைக் கொண்டு இயங்குவதாக ஆரம்பித்தது. பின்னர் நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளாக மாறியது. இன்று அது நுண்சித்தரிப்புகளினால் ஆனதாக மாறிவருகிறது. இன்றைய தலைமுறையின் கவிஞர்களில் ஒருவரான இளங்கோ கிருஷ்ணனின் இக்கவிதைகள், புதுக்கவிதையில் இன்று நடப்பதென்ன என்று காட்டுகின்றன.
9. சப்தரேகை, ராணிதிலக், வெளியீடு: அனன்யா, விலை ரூ. 100
கவிதை பற்றிய கோட்பாடுகள், கவிஞர்களால் மட்டுமே வாசிக்கப்படும். மிகக் குறைவாகவே அத்தகைய எழுத்துக்கள் வருகின்றன. ஆனால், மொழியின் அழகியலை நுணுக்கமாக விவாதிப்பவை அவையே. விரிந்த கோணத்தில் ஒரு காலகட்டத்தின் கருத்துகளையும் உணர்ச்சிகளையும் மொழி எப்படி எடுத்து தன்னுடைய ஆழத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதைக் காட்டுபவை அவை. இளைய தலைமுறை கவிதை விமர்சகரான ராணிதிலக்கின் இக்கட்டுரைகள் முக்கியமான சில தளங்களைத் தொட்டு விவாதிப்பவை.
10. வேளாண் இறையாண்மை, பாமயன், வெளியீடு: தமிழினி, விலை ரூ. 110
தலைப்பே சுட்டிக்காட்டுவதுபோல, மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி இந்நூல் பேசுகிறது. நாம் அரசியல் இறையாண்மை, பொருளியல் இறையாண்மை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மையறியாமலேயே நம் மண்ணும் நீரும் அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. நாம் வேளாண்மை செய்யும்போது அதில் முதலீடு செய்யும் தொகையில் பெரும்பகுதி நேராக அன்னிய நிறுவனங்களுக்குச் செல்கிறது. நவீன வேளாண்மை என்பது நம் நிலத்தை படிப்படியாக நம்மிடமிருந்து அன்னியமாக்குகிறது. பாமயன் நல்ல தமிழில் எழுதக்கூடிய வேளாண் அறிவியலாளர். அவரது முக்கியமான நூல் இது. நன்றி: குங்குமம் 31-12-12