ஓநாய் குலச்சின்னம்
ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன், அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை 93, பக்கங்கள் 672, விலை 500ரூ.
சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியை மட்டுமே நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாகத் தொன்மை வாய்ந்த மங்கோலிய மேய்ச்சல் புல் நிலம் என்ன ஆனது என்பதன் வரலாற்றுப் புனைவே இந்த நாவல். மங்கோலிய மேய்ச்சல்காரர்களுக்குப் புல்தான்… நாய், ஆடு, மாடு, குதிரைகளைவிடப் பெரிய உயிர். இரக்கத்துக்கு உரிய உயிர். புல்லை மேயும் மான்கள் அவர்களைப் பொறுத்தவரையில் மோசமானவை. மான்களை வேட்டையாடும் ஓநாய்கள். மேய்ச்சல் நிலத்தின் பாதுகாவலன்கள். ஓநாய்கள், மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா, மான்களோடு சேர்ந்து தங்கள் ஆடு, மாடுகளை ஓநாய்கள் வேட்டையாடினால், பதிலுக்கு மங்கோலியர்கள் ஓநாய்களை வேட்டையாடுவார்கள். ஆனாலும் அது அவர்களின் குலச்சின்னம். தாங்கள் இறந்ததும் தங்களது நிர்வாண உடலை ஓநாய்க்குத் திண்ணக்கொடுப்பார்கள். கலாசாரப் பரவலாக்கத்தின் முதல்படியாக மேய்ச்சல் நிலத்துக்குள் அடியெடுத்துவைக்கிறார்கள் சீன விவசாயிகள். அவர்களைப் பொறுத்தவரை நிலம் முதலில் மனிதனுக்கானது. ஓநாய்கள் அழிவுச் சக்தி என்று நினைப்பதால் அவற்றைக் கண்மூடித்தனமாக வேட்டையாடுகிறார்கள். மேய்ச்சல் நிலத்தின் தொன்மையான ஆன்மா சிதைப்படுக்கிறது. மங்கோலிய மக்களோடு வாழ்ந்த 11 வருடங்களில் தான் பார்த்தவற்றை சீன விவசாயப் பாரம்பரியத்தில் வந்த ஜென் சென் என்கிற பாத்திரத்தின் பார்வையில் விவரிக்கிறார் ஆசிரியர். நமக்கு அந்நிய உயிரினமான ஓநாய், மிக அந்நிய மேய்ச்சல் நிலக் கலாசாரம் பற்றிய வாசிப்பு ஆரம்பத்தில் லேசான சலிப்பைக் கொடுக்கிறது. அதுவே ஓநாய்களின் வேட்டை முறைகள், அவற்றின் புத்திசாலித்தனம் என்று நகர்ந்ததும் ஓநாய்கள் மேல் ஆர்வமும் விருப்பமும் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஓநாய்களின் கூட்டுக் குடும்ப வாழ்கை, மனிதர்களை ஏமாற்றும் அவற்றின் புத்திசாலித்தனமான வேட்டை வியூகங்கள், குட்டிகளைப் பறிகொடுத்த தாய் ஓநாய்களின் தற்கொலையில் முடியும் எதிர்த் தாக்குதல்கள், வலி நிறைந்த துயரமான நள்ளிரவு ஊளைகள், மங்கோலியக் குதிரைகளின் வீரம் என எழுத்தில் ஒரு நேஷனல் ஜியாக்ரஃபி சேனலைக் காட்சிப்படுத்தியிருப்பது வன அழகியல். சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள்கூட சர்க்கஸில் ரிங் மாஸ்டருக்குப் பணிந்து வித்தை செய்வதைப் பார்த்திருப்பாய். உலகில் எங்காவது சர்க்கஸில் ஏதாவது ஓர் ஓநாய் மனிதனுக்குப் பணிந்து, பயந்து நடந்து பார்த்திருக்கிறாயா… அவை புனிதமான ஆன்மாக்கள். இது மாதிரியான சின்னச் சின்ன உரையாடல்கள் மூலம் ஓநாய்கள் மீதான பிம்பத்தை, ஆர்வத்தைப் பிரமாதமாக நம் மனதில் கட்டமைக்கிறார் ஜியாங் ரோங். இறுதியில் சீன ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி ஓநாய்கள் கொல்லப்பட்டு, அதனால் எலிகள் பெருகி மேய்ச்சல் நிலம் பாலையாகிவிடுவதும், புற்கள் அழிந்துவிடுவதால் பீஜிங் நகரம் புபதிப் புயலால் அடிக்கடி தாக்கப்படுவதுமான பதிவுகள் மனித குலத்துக்கான எச்சரிக்கை. மீண்டும் மீண்டும் பெரும் வர்ணனைகள், நீளமான வசனங்கள் ஆகியவை வேக நடையில் ஒரு வேகத் தடை. ஆனாலும் 30 வருடக் கலாசாரப் பலம் மிகுந்த, தீரமான மக்களோடு வாழ்ந்த உணர்வைத் தருகிறது இந்த நாவல். நன்றி: ஆனந்த விகடன் 27-03-2013.