தமிழ்க் காதல்
தமிழ்க் காதல், தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம், மல்லிகா பதிப்பகம், 60/6, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர், சென்னை 16, பக். 424, விலை 200ரூ.
உலக இலக்கியங்களில் இல்லாத தனித்தன்மை தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமே உண்டு. அது, அகம் புறம் என்று வாழ்க்கையை வகுத்து, அவற்றுக்கு அணி செய்வதாக அமைந்த சங்க இலக்கியங்கள்தான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர் வாழ்வை விளக்குபவை சங்க இலக்கியங்கள். இவற்றில் அகத்திணை இலக்கியங்களை மட்டும் ஆய்வுப்பொருளாகக் கொண்டு, பழந்தமிழர் வாழ்வில் அகத்திணை என்று குறிப்பிடப்படும் காதல் வாழ்வு குறித்து நுணுகி ஆராய்ந்துள்ளார் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான வ.சுப. மாணிக்கம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இனிய தமிழ் நடையுடன் அவர் எழுதிய இந்நூல் இன்றும் சுவையுடன் இலங்குவது, தமிழின் குன்றா இளமைக்குச் சான்று.அகத்திணைக் கல்வி பயில்வோரைப் பண்படுத்தும் தகைமையது. பொருந்தா மணமும் அவசரக் காதலும் கூடிய தற்போதைய காலத்தில் கண்டிப்பாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டியது. சங்க இலக்கியங்களுள் அகத்திணைகள் பயின்றுவரும் பாக்களை விளக்கி, அவற்றை இயற்றிய ஆன்றோர் பெருமக்களையும் சுட்டிக்காட்டி, அகத்திணையின் நோக்கத்தை நிறுவுகிறார் ஆசிரியர். பருவம் அரும்பிய காளைகளும் கன்னியரும் தம்மைப் பண்படுத்திக்கொள்ள படிக்க வேண்டிய அரிய நூல்.
—-
இந்திய இலக்கியத்திற்கு கு. சின்னப்ப பாரதியின் பங்களிப்பு, (கட்டுரைத் தொகுப்பு) பாரதி புத்தகாலயம், சென்னை 18, பக். 224, விலை 150ரூ.
முற்போக்கு படைப்பிலக்கியவாதியான கு. சின்னப்ப பாரதியைப் பற்றிய 46 பேர்களின் பதிவு. ப. பாலசுப்பிரமணியன், பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, சுந்தா, ஜனநேசன், ஸ்டாலின், குணசேகரன், நா. செந்தில்குமார், ஆர். நல்லகண்ணு, சி.எஸ். நஞ்சுடையான், கோ. சுந்தரமூர்த்தி என 46 பல்துறை வித்தகர்கள் இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கு.சி. பா. வை பல கோணங்களில் கண்டு, படித்து, ரசித்து படைப்பிலக்கியத்துக்கு அவர் வழங்கியிருக்கும் பங்களிப்பைப் பகிர்ந்தளித்து, அவருடைய ஆளுமைகளைப் பதிவு செய்துள்ளனர். என் கணவர் என்ற தலைப்பில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவர் முகத்தில் தன் தங்கை கரித்துண்டைக் குழைத்து, பெரிய மீசை வரைந்ததையும், ஒரு நாள்கூட தன் கணவர் தனக்கு இளம் வயதில் பூவோ, இனிப்பு பண்டங்களோ வாங்கிக்கொடுக்காததையும், மனைவிக்கே உரிய தன் ஆதங்கத்தையும், திருமணம் முடிந்த இரண்டொரு மாதத்தில் நாமக்கல்லுக்குக் குடியேறியபோது தன்னைத் தனியாக விட்டுவிட்டு, கட்சி வேலை என்று சென்றவர் பல சமயங்களில் வீடு திரும்பாமலேயே இருந்துவிடுவார். அப்போதெல்லாம் மனது பொல்லாத வேதனை அடையும். இப்படியெல்லாம் பதிவு செய்திருக்கும் கு.சின்னப் பாரதியின் மனைவி சி. செல்லமாவின் ஏக்கமும் அப்பாவித்தனமான பதிவுகளும் நெஞ்சை நெகிழ வைத்தன. இப்படி நெஞ்சை நெகிழ வைக்கும் பலருடைய பதிவுகள், படித்து முடித்ததும் கு. சின்னப்ப பாரதி கொடுத்துவைத்தவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நன்றி: தினமணி, 2410/11.