சமணம் வளர்த்த தமிழ்
சமணம் வளர்த்த தமிழ், பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் (மூன்று பாகம்) தமிழ் நிலையம், சென்னை 17,பக். 1233, விலை மூன்று தொகுதிகள் 700ரூ.
வேதகாலத்திற்கும் முற்பட்டதான சமண சமயத்தின் மேன்மைகளைப் பற்றி, ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்தர் தென்னாட்டுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பியர் சமண சமயத்தவர் என்பதும், தொல்காப்பியம் ஏசுநாதர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்திருக்கிறது. சமண சமயம் உருவாகி வளர்ந்த கால கட்டங்களில் பல அரிய தமிழ் இலக்கியங்கள் உருவாயின. அப்படி உருவான சமண இலக்கியங்களால் தமிழ் நன்கு வளர்ச்சி கண்டது என்பது வரலாற்றுப் பதிவு. காப்பியங்கள், அற இலக்கியங்கள், இலக்கணங்கள், புராணங்கள், நிகண்டுகள், சிற்றிலக்கியங்கள், ஜோதிட நூல்கள் எனப் பலவற்றை சமணர்கள் இயற்றியுள்ளனர். சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் ஆகிய காலகட்டங்களில் இயற்றப்பட்ட சமண நூல்களைப் பற்றிய முழுமையான தகவல்களும், ஆராய்ச்சிக் குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பெருங்கதை, நேமிநாதம், சீவகசிந்தாமணி, வளையாபதி, சூளாமணி, நீலகேசி, யாப்பருங்கலக்காரிகை, நன்னூல், யசோதர காவியம், திருநூற்றந்தாதி, திருப்பாமாலை, ஸ்ரீபுராணம், இப்படி 60க்கும் மேற்பட்ட சமண நூல்களால் தமிழ் வளர்ந்த வரலாற்றை இம்மூன்று தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். அற்புதமான அரிய படைப்பு. நன்றி: தினமணி, 9/4/12.
—-
மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி 1, கவிஞர் பொன். செல்வமுத்து, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 150ரூ.
தமிழ் திரைப்பட கவிஞர்களில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் அ.மருதகாசி. காதலுக்கும் பாட்டு, கல்யாணத்துக்கும் பாட்டு, உழவர்க்கும் பாட்டு, உழைப்பாளிக்கும் பாட்டு என இவர் தொடாத துறையில்லை. எழுதாத பாட்டில்லை. 1949ல் மாயாவதி என்ற படத்தில் தொடங்கிய இவரது பாட்டு 1983ல் தூங்காத கண்ணின்று ஒன்று படம் வரை தொடர்ந்தது. இவர் எழுதிய 678 பாடல்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு பாடிய 312 பாடல்களை முதல்கட்டமாக தொகுத்து ஒன்று என்ற தலைப்பில் தந்திருக்கிறார் நூலாசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து. பாடல்களின் கற்கண்டு சுவை கவிஞரின் படைப்புக்கு வெண்சாமரம் வீசுகிறது. கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே என்று காதலின் ஆரம்பத்தை குலமகள் ராதைக்காக எழுதியவர், எந்நாளும் வாழவிலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றனாய் ஆசை நெஞ்சிலே என்று விடிவெள்ளிக்காக காதலின் மடிவையும் எழுதிக் காட்டியதை படிக்கும்போது காதலில் கரை கண்டவர்கள் கூட கரைந்து போவார்கள். தினத்தந்தி