தமிழக சூரிய மின் கொள்கை-ஓர் ஆய்வு

தமிழக சூரிய மின் கொள்கை-ஓர் ஆய்வு, சா. காந்தி, சமூக விழிப்புணர்வு பதிப்பகம், 68, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 138, விலை 100ரூ.

புள்ளிவிவரங்கள் அலுப்பூட்டுபவை. ஆனால் அவைதான் அறிவூட்டுபவை. தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும் புள்ளிவிவரங்களே. அவற்றை ஊன்றிப் படித்தால் மின்சாரம் நம்மைத் தாக்கிய அதிர்ச்சி. பொறியாளர் சா. காந்தியின் இந்தப் புத்தகம், தமிழில் மின்சாரம் குறித்த ஆய்வுகளில் மிக முக்கியமானது. மாநிலம் முழுக்க மாபெரும் மின் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் 3000 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின்கொள்கையை, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. நீண்ட கால நோக்கத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு சூரிய மின்சாரம் ஒன்றே வழி என அறிவித்த அரசு, சூரிய மின்சாரத் திட்டங்களுக்கு ஏராளமான மானியங்களையும் அறிவித்துள்ளது. இதைப் பரந்தகோணத்தில் ஆய்வு செய்கிறது இந்தப் புத்தகம். 1954ம் ஆண்டு தற்செயலாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது அமெரிக்காவில் கண்டறியயப்பட்டது. அதன்பிறகு 1982ல் உலகின் முதல் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க அமைத்தது. பிறகு மெள்ள மெள்ள ஐரோப்பிய சந்தைக்குள் ஒரு சூறாவளியைப் போல இந்தத் தொழில்நுட்பம் புகுந்ததையும் சீன நறுவனங்களின் வருகையையும் விவரிக்கும் நூலாசிரியர் காந்தி, இந்தியாவின் சூரிய மின் கொள்கையை இன்னும் ஆழமாக விவரிக்கிறார். சூரிய மின்சாரத்தில் மாபெரும் எதிர்காலம் இருப்பதாக நம்பிய பல பன்னாட்டு நிறுவனங்கள், சூரிய மின்தகடுகள் உற்பத்தித் துறையில் இறங்கின. ஆனால் அதிகசெலவுப் பிடிக்ககூடிய இந்தத் தொழில்நுட்பம் எதிர்பார்த்த வேகத்தில் வெற்றியடையவில்லை. அவர்களிடம் அபரிமிதமாகக் குவிந்துகிடக்கும் உற்பத்தியான அந்தத் தகடுகளை, சந்தைப்படுத்த நாடுகளைத் தேடுகின்றனர். அதற்குத் தோதாக சிக்கியிருக்கிறது இந்தியா. தமிழக அரசின் புதிய சூரிய மின்சாரக் கொள்கையானது, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், தங்களின் பயன்பாட்டில் ஆறு சதவிகித மின்சாரத்தை சூரிய மின்சாரம் மூலம் பெறவேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. அதேபோல அமைக்கப்படவிருக்கும் தனியார் சூரிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடன் சுமையில் தள்ளாடும் மின்சார வாரியத்துக்கு இதன் மூலம் கூடுதல் சுமை உருவாகும். 2015ம் ஆண்டிலிருந்து ஓவ்வோர் ஆண்டும் 1100 கோடி ரூபாய் கூடுதலாகக் கட்ட வேண்டியிருக்கும். இது மின்கட்டணத்தின் பெயரால் மக்களின் தலையில்தான் விழும். ஏற்கெனவே நஷ்டத்தில் தடுமாறி நிற்கும் வாரியத்தின் தலையில், சூரிய மின்சாரம் மூலம் கூடுதல் சுமையை ஏற்றி அது தடுமாறி விழும் தருணத்தில் தனியார் கைக்குத் தாரைவார்ப்பதுதான் அரசின் திட்டம். தமிழக அரசின் சூரிய மின் கொள்கை மூலம், உலக அளவில் சூரிய மின் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு 26000 கோடி ரூபாய்க்கான புதிய சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வால்மார்ட், மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சூரிய மின்தகடு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. இதுபோன்ற அதிகபட்ச புள்ளிவிவரங்களை உள்ளடக்கிய புத்தகத்தில் சிறு பிழையும் பெரும் அனர்த்தங்களை கொடுத்துவிடும். அந்தவகையில் இந்த நூல் இன்னும் கூடுதல் கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நன்றி:விகடன், 1/8/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *