பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள்
பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ.
1820களில் அடிமைகளாக இலங்கைக்குச் சென்ற மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு சொல்கிறது. வாய்மொழிப் பாடல்கள் மூலம் அவர்களின் துயரங்களையும் இழப்புகளையும் இந்நூல் பதிவு செய்கிறது. -தொகுப்பு: கவின்மலர், கௌரி. நன்றி: இந்தியா டுடே, 11/12/13
—-
ஆ. பத்மநாபன் – ஆளுமையின் அரிய பரிமாணம், பசுபதி தனராஜ், தாய்த்தமிழ் பதிப்பகம், 1/4, துளசி அடுக்ககம், 7ஆவது குறுக்குத் தெரு, ஷெனாய் நகர், சென்னை 30, பக். 272, விலை 200ரூ.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து இமாலயச் சாதனைகள் புரிந்த ஆ. பத்நாபனின் வாழ்க்கை வரலாற்றை, இன்று வாழ்க்கையின் கடினமான தருணங்களுக்கிடையே எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிற ஒவ்வோர் இளைஞரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆளுநரின் ஆலோசகர், மத்திய தேர்வாணையக் குழு உறுப்பினர், மாநில ஆளுநர் என்று பல்வேறு உயர் நிலைகளை எட்டிய போதிலும், தானாக முன்வந்து பிறருக்கு உதவும் ‘மனிதநேயம்’ என்ற உயர்ந்த குணம் அவரை விட்டு அகலவில்லை என்பதை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. அதேவேளையில், இத்தனை பொறுப்புகளுக்கும் மத்தியிலும் எப்படி ஒரு மனிதரால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பன்முக ஆற்றல்களுடன் திகழ முடிந்தது என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. இந்த நூலைக் கடகடவென்று படித்துவிட்டு எளிதாகத் தூக்கிப் போட்டுவிட முடியாது. ஒவ்வொரு வரியைப் படிக்கும்போதும், இப்படி ஓர் உயர்ந்த மனிதரா? என்ற கேள்விதான் உள்ளத்தில் மேலோங்குகிறது. மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் இப்படித்தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. சாதனைக் கனவுகளோடு உலா வருபவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் பயன்படும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 2/12/13.