என் சரித்திரச் சுருக்கம்
என் சரித்திரச் சுருக்கம், கி.வா. ஜகந்நாதன், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 108, பக். 544, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-340-6.html
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் வார இதழில் உ.வே. சாமிநாதையர் என் சரித்திரம் என்ற பெயரில் தொடராக எழுதிய தன் வரலாறு மிகவும் பிரபலமானது. அவர் எழுதிய 122 அத்தியாயங்களை 58 அத்தியாயங்களாகச் சுருக்கி, ஆனால் ஐயரின் வாழ்க்கைச் சம்பவங்களில் முக்கியமான எதுவும் விடுபட்டுவிடாமல் கவனமாகத் தொகுத்து என் சரித்திரச் சுருக்கம் என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் ஐயரின் மாணவரான கி.வா.ஜெகந்நாதன். ஐயரின் வாழ்க்கையில் உத்தமதானபுரத்துக்கு நிகரானத் தொடர்புடைய அவர் பிறந்த ஊரான சூரியமூலை, சங்கீத ஞானம் மிக்கவரான ஐயரின் தந்தைக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கும் இருந்த நட்பு, சங்கித வித்வான் மகா வைத்தியநாதையரை ஐயர் சந்தித்த சம்பவம், பட்டீச்சுரத்தில் ஐயருக்கு ஏற்பட்ட சில சங்கடங்கள், ஐயரின் ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் வாழ்வின் இறுதி நாள்களில் பொருளாதாரரீதியில் சிரமப்பட நேர்ந்தது. திருவாவடுதுறை ஆதீனகர்த்தரைப் புகழ்ந்த மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பாடலை ஆன்றோர் நிறைந்த அவையில் ஐயர் பாடி பாராட்டுகளைப் பெற்றது, ஐயரவர்கள் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக வேலையில் சேர்ந்து பெற்ற முதல் சம்பளத்தைத் தன் தாயாரிடம் தந்து ஆசி பெற்றது – இப்படி பல்வேறு சுவையான சம்பவங்கள் இந்நூல் முழுவதும் விரவியிருக்கின்றன. குறிப்பாக, தன் தந்தையுடன் சென்று ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை முதன் முதலாக சந்தித்ததை ஐயர் விவரித்திருக்கம் பாங்கு அற்புதமானது. எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லாத நீரோட்டம் போன்ற தெளிவான உரைநடை வியக்க வைக்கிறது. தன் வரலாறு என்கிற பெயரில் நாள் குறிப்புகளை தருகிற நூல்களைப் போலன்றி, கடந்த நூற்றாண்டு தமிழகத்தின், குறிப்பாக அன்றைய தஞ்சை மாவட்டத்தின், அம்மாவட்ட மனிதர்களின், அவர்களின் உயர்ந்த பண்புகளின் உரைகல்லாக விளங்குகிறது இந்நூல். ஒரே ஒரு குறை, அச்சுப்பிழைகள் (மகா வைத்தியநாதையரின் சிறந்த சாரீரத்திற்குக் காரணம் அவரது சாதகம் மட்டுமல்ல என்று இருக்க வேண்டியது அவரது சாதம் மட்டுமல்ல என்று இருப்பது ஒரு சோறு பதம் பக்.194). இவை அடுத்த பதிப்பில் சரிசெய்யப்பட வேண்டியது அவசியம். நன்றி: தினமணி, 2/12/13.