ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது
ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது, எஸ்.என். நாகராஜன், கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 60ரூ.
கம்யூனிஸத்தைத் தத்தவார்த்த நோக்கில் அணுகிப் படிப்பவர்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடிய பெயர், எஸ்.என். நாகராஜன். தமிழகத்தில் வாழும் மார்க்சிய ஆய்வாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் எஸ்.என்.என். நடத்திய மார்கசியம் இன்று என்ற இதழ் மூலமாகத்தான் இன்றுள்ள பலரும் மார்க்சியத்தை உணர்ந்துகொண்டார்கள். மார்க்சியத்தையும் வைணவத்தையும் சேர்த்து சுண்டவைக்கும் காரியத்தை எஸ்.என்.என். செய்திருந்தாலும் மார்க்சிய மூலத்தை தமிழகத்தில் அவர் விதைத்ததை, யாராலும் புறக்கணிக்க முடியாது. தமிழக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தேசிய இனச் சிக்கலின் யுத்தத் தந்திர முக்கியத்துவத்தை 50களில் இருந்து எழுப்பி வந்தவர். இதன் நீட்சிக்காக 1970ல் கம்யூனிஸ்ட் கட்சி (தமிழகம்) என்ற அறிக்கையை முன்வைத்தவர். மாவோ வழியில் எழுந்த மார்க்சியத்தை கீழை மார்க்சியம் என்று வரையறுத்து, தன்னை கீழை மார்க்சியச் சிந்தனையாளராக அறிவித்துக்கொண்டவர். இவரை நாடோடிப் புரட்சியாளர் என்று தோழர்கள் அழைப்பார்கள். வேளாண்மை அரசியல் அறத்துடன் சேர்த்துப் பேசத் தொடங்கியவர். பசுமைப்புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே, அதனைக் கடுமையாக எதிர்த்து எழுதிய சூழலியலாளர். 90 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் எஸ்.என். நாகராஜனின் முழுமையான பேட்டிதான் இந்தப் புத்தகம். மார்க்சியம் அடிப்படையில் ஒரு ஐரோப்பிய சிந்தனையாகவே புரிந்துகொள்ளப்பட்டது. அதை ஒரு மேலை நாட்டு அறிவியல் சிந்தனையாக அணுகக் கூடாது. அதை மெய்யியல் நோக்கில் அணுகவேண்டும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியவர் நாகராஜன். வரலாற்றியல் மற்றும் இயங்கியல் பொருள் முதல்வாதம் என்ற ஸ்டாலினின் புத்தகம் படித்து அதன் மூலமாக மார்க்சியத்தின் அறிமுகமும் ஆர்வமும் இவருக்கு ஏற்பட்டது. அப்போது இவருக்கு 27 வயது. அதே அழுத்தத்துடன் இன்றும் நாகராஜன் இருக்கிறார். எந்தத் தத்துவமும் நிறுவனமயமாவதை நாகராஜன் தொடக்கக் காலத்தில் இருந்தே எதிர்த்துவந்துள்ளார். அனைத்திந்தியக் கட்சிகளில் தலைமை ஏற்பவர்கள் தொழிலாளிகளும் அல்லர். விவசாயிகளும் அல்லர். கிராமங்களையே பார்க்காதவர்களாக இருப்பார்கள். அவர்கள்தான் அனைத்தையும் தீர்மானிப்பார்கள். அது கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்க முடியுமா? அனைத்திந்தியக் கட்சி என்பது ஓர் இணைப்புக் குழுவாகத்தான் இருக்க முடியுமே தவிர, அது அரசியலை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்க முடியாது என்று நாகராஜன் சொல்கிறார். ஆயுதப் போராட்டங்கள் பற்றிய நுண்மையான பார்வையைச் சொல்கிறார். ஆயுதப் புரட்சி என்பதற்கான சாத்தியம் தீர்ந்துவிட்டது. ஏகாதிபத்தியப் பிளவு இருக்கிறவரை, அந்த முறை சரி. ஏகாதிபத்தியங்கள் இணைந்துள்ள நிலையில், இனி அந்த முறை பயன் இல்லை. ஆயுதமற்ற போராட்டங்கள் இனி அதிகம் நடக்கும். ஆயுதப் போராட்டத்தால் இனி உலகத்தைக் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் உங்களிடம் இருப்பதுதான் அவர்களிடம் இருக்கிறது என்று சொல்கிறார். பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் நாகராஜனின் பார்வையைப் புறக்கணிக்க முடியாதது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 5/2/2014.