தமிழ்நாட்டில் காந்தி
தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி பி.ஏ., விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 425ரூ.
அகிம்சை மீது அளவற்ற அன்பு செலுத்திய காந்தி, தமிழின் மீது தணியாத காதல் ஈடுபாடும் வைத்திருந்தார். தான் ஒரு இந்து என்பதற்காக கீதையை மதித்தார் என்று எடுத்துக்கொண்டால், உலகப்பெரும் அறநூல் என்ற மகுடத்தோடு திருக்குறளைப் படித்தார். எழுத்துக் கூட்டியாவது தமிழைப் படித்தவர். மோ.க. காந்தி என்று தமிழில் அவர் இட்ட கையெழுத்து இன்றும் சபர்மதி ஆசிரமத்தில் இருக்கிறது. இந்த ஈடுபாடுதான் அவரைத் தமிழகத்தை நோக்கியும் அடிக்கடி வரவைத்தது. 1896 முதல் 1946 வரை இருபது முறை காந்தி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அழகிய ஆடைகள் உடுத்துவதில் ஆர்வம் இருந்த காந்தியை அரை நிர்வாண பக்கிரி ஆக்கிய இடம் மதுரை அல்லவா. தமிழ்நாட்டில் காந்தி எங்கெல்லாம் போனார், யாரையெல்லாம் பார்த்தார் என்னவெல்லாம் பேசினார், எதைச் சாப்பிட்டார், யாரோடு பழகினார் என்பதை அப்படியே காட்சியாக விவரித்துச் செல்லும் வரலாற்றுப் பதிவு இது. மேலோட்டமாக நகர்ப் பகுதிக்குள் வந்து கூட்டம் பேசிவிட்டுப் போகவில்லை காந்தி. ஒரு பெரிய நகருக்குப் போகும் வழியில் இருக்கும் சிற்றூர்களில் உள்ள மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்கள் வாழ்க்கை நிலைமை பற்றிப் பேசுகிறார். பெண் பிள்ளைகளைப் படிக்கச் சொல்கிறார். ஆண்களைக் குடிக்காதீர்கள் என்கிறார். தீண்டாமைக்கு எதிராக தினமும் பேசியிருக்கிறார். அதற்காக சனாதன இந்துத்துவ அமைப்புகள் காட்டிய எதிர்ப்பை சமாளிக்கிறார். எல்லா ஊரிலும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பிரச்னையின் வீரியத்தை உணர்ந்து பதில் சொல்கிறார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிரான கருத்துக்களைவிட சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களையே அதிகமாக காந்தி பேசி வந்தது புரிகிறது. இந்தப் புத்தகம் வெறும் காந்தியின் வரலாறு தொடர்புடையது மட்டுமல்ல. காந்தியின் ஊடாக தமிழகத்தின் சுமார் (1896?1946) 50 ஆண்டுகால அரசியல், வரலாறு, சமூக நிலைமைகளை உணர முடிகிறது. காந்தி எவ்வளவு மறுத்தாலும் வாழ்த்து மடல்கள் வாசித்துக் கொடுப்பதை தமிழன் அன்றே தொடங்கிவிட்டான். அவசியமற்ற பொருட்களை வீட்டில் வாங்கிக் குவிப்பதைப் பார்த்த காந்தி, காரைக்குடியில் அலங்காரப் பொருள் விற்கும் கடையை நான் தொடங்கினால் பெரும் பணக்காரன் ஆகிவிடுவேன் என்று கிண்டல் அடிக்கிறார். இந்தப் புத்தகம் நம்மை கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்துக்கு அழைத்துச் செல்கிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 19/2/2014.