குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில் ராஜேந்திரன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 328, விலை 250ரூ.
இன்றைய குழந்தைகளிடம் கடவுள் கண்முன் தோன்றி வரம்கேள் என்று சொன்னால் இந்த உலகத்துல இனிமே பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் அளவுக்கு பள்ளிகள் குழந்தைகளைப் படுத்தி எடுக்கின்றன. விளையாட்டும் குறும்பும் நிறைந்த குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் தான் உலகில் இருக்கும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள். ‘ இந்தப் புத்தகம் இருண்ட குகையின் முடிவில் தென்படும் ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது. நூலாசிரியர் கமலா முகுந்தா 30 வருடங்களாக கல்வி தொடர்பான உளவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்தவர். குழந்தைகளின் மூளை எப்படிச் செயல்படுகிறது என்ன செய்தால் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வியின் மீது உற்சாகம் பிறக்கும்? குழந்தைகளின் மூளை எப்படிச் செயல்படுகிறது? என்ன செய்தால் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வியின் மீது உற்சாகம் பிறக்கும்? குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி என்ற கேள்விகளுக்கான விடையை குழந்தைகளின் உளவியல் பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தில் மிக விரிவாக விவரித்திருக்கிறார். ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் குழந்தைகளின் கல்வி மீது ஆர்வம் இருக்கும் பெற்றோருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாக வந்து சேர்ந்திருக்கிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தில் சொல்லி இருப்பதன்படி நடந்துகொண்டால் பள்ளிக்கூடம் என்றாலே பத்து மைல் தொலைவுக்கு விழுந்தடித்து ஓடும் குழந்தைகள், பள்ளிக்கூடத்தை நேசிக்க ஆரம்பிப்பார்கள். நன்றி: புதிய புத்தகம் பேசுது, 1/9/2/13