மகிழ்ச்சியான இளவரசன்
மகிழ்ச்சியான இளவரசன், ஆஸ்கார் வைல்டு, தமிழில் யுமா வாசுகி, புலம், சென்னை 5, பக். 96, விலை 70ரூ.
பிரியங்களும் மகிழ்வும் உற்சாகமும் அளவில்லாக் கற்பனைகளும் நிறைந்த குழந்தைகளின் உலகம், விமர்சனங்களையும் விசனங்களையும் கொண்டுழலும் வளர்ந்த மனங்களிலிருந்து வேறுபட்ட உன்னதங்கள் நிறைந்த செழுமைமிக்க நிலமென விரிந்துகிடக்கிறது. புராண, இதிகாசங்களும் வாய்மொழிக் கதைகளும் நிரம்பியிருக்கும். தமிழ்ப் பரப்பில் எழுதப்பட்ட குழந்தை இலக்கியங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கவையே. மாயாவிகளும், நன்மை செய்யும் குள்ளமனிதர்களும், தந்திரம் மிகுந்த விலங்குகளும், பேசும் பூக்களும், உயிர் காத்து வைத்திருக்கும் அன்னங்களும், இவர்களின் உலகில் உயிர்ப்புடன் நடமாடிக் கொண்டிருப்பவர்கள். கற்பனைகள் செறிந்த இந்த உலகில், அதன்பின் உருவங்கள் மனிதர்களைக் கடந்து அனைத்து ஜீவன்களிலுமாக உருக்கொள்கின்றன. இப்படியொரு அற்புத வெளியில் ஆஸ்கர் வைல்டின் மகிழ்ச்சியான இளவரசனுக்கு பேரிடம் உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது. பிறமொழிகளிலிருந்து தமிழ்க் குழந்தைகளின் கதைப் பரப்பிற்குச் செழுமை சேர்த்துக் கொண்டிருக்கும் யூமா வாசுகி, தன் எளிய மொழியாளும் தடையற்ற கதை எடுதுரைப்பினாலும் தமிழுக்கே உரியதாக இந்தக் கதைகளை மாற்றி நெருக்கம் கொள்ள வைத்திருக்கிறார். நன்றி: புதிய புத்தகம் பேசுது, 1/9/2/13
—-
ஃபெலூடா கதை வரிசை, சத்யஜித் ரே, புக்ஸ் ஆஃப் சில்ரன்.
தன் திரைப்படங்கள் மூலம் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த இயக்குநர் சத்யஜித் ரே குழந்தைகளுக்கான துப்பறியும் கதைகளை எழுதியிருக்கிறார். பெரியவர்களுக்கான துப்பறியும் கதைகளுக்கும் சிறுவர்களுக்கு எழுதுவதற்குமான சிரமங்களை எளிதாகக் கடக்கம் ரேயின் இந்த நூல் வரிசை 35 தொகுதிகள் கொண்டது. அதில் 20 தொகுதிகள் நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வீ.பா. கணேசன். எந்தளவுக்கு ரேயின் படங்கள் கொண்டாடப்பட வேண்டியவையோ அதே அளவுக்கு ரேயின் ஃபலூடா கதை வரிசை கொண்டாடப்பட வேண்டும் என்கிறது புக்ஸ் ஆஃப் சில்ரன் பதிப்பகம். நன்றி: இந்தியா டுடே, 29/1/2014.