தீப்பறவையின் கூடு
தீப்பறவையின் கூடு (பிற மொழி நவீன சிறுகதைகள்), தமிழில் திலகவதி, அம்ருதா பதிப்பகம், சென்னை, பக். 186, விலை 120ரூ.
ஷ்ர்லி, சல்மான் ருஷ்டி, ஜான்ஸ்டேன் ஜான்சன், ஆன்டன் செகாவ், ஃப்ரான்ஸ் காஃப்கா, ஐஸக் பாஷெவிஸ், சிங்கர், பிரதிபாரே, பென் ஓக்ரி, லூவிஸ் எட்ரிச் ஆகிய பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் நூல். அந்நிய நாட்டின் மோகத்தால் தாய் நாட்டை பழிப்பதில் எதிர்காலத் தலைமுறை அடையும் பிரச்னைகள், சகோதரத்துவத்தின் மேன்மை, குழந்தைத் திருமணத்தின் சோகம், காதலின் பிரிவு, இப்படிப் பல கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டு படிப்பவர்களைக் கதை நிகழ்ந்த காலத்தின் சூழ்நிலைக்கே கொண்டுபோகின்றன. குறிப்பாக ஆன்டன் செகாவ் எழுதியிருக்கும் ஒரு எழுத்தரின் மரணம் சிறுகதையின் கடைசி வரிகள் நம்மை அதிரவைக்கின்றன. இந்திய எழுத்தாளரான பிரதிபா ரே எழுதியிருக்கும் தேவகி சிறுகதையும் கனத்த சோகத்திற்குள் நம்மை மூழ்க வைக்கிறது. நன்றி: தினமணி, 24/9/2012.
—-
காமராசர் சொற்பொழிவுகள், கு. பச்சைமால், தமிழாலயம், கன்னியாகுமரி மாவட்டம், பக். 100, விலை 35ரூ.
அடுக்கு மொழியில் பேசாவிட்டாலும் ரத்தின சுருக்கமாக சிறப்பாக பேசி அனைவரையும் கவரக் கூடியவர் காமராசர். அவர் சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். உணவு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி, அரிசி பிரச்னை, கல்வியில் சமவாய்ப்பு போன்ற அடித்தட்டு மக்களின் சமூக பிரச்னைகளை மட்டுமின்றி அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், அரசுகளுடன் நம் நாட்டின் உறவுகள் குறித்தும் காமராசரின் அரிய கருத்துகளை அறிந்து கொள்ள முடிகிறது. தேசத்துக்கு தொண்டு செய்ய கிடைத்த வாய்ப்பாகவே தன் வாழ்க்கையை கருதியுள்ளார் என்பதை அவரது சொற்பொழிவுகள் காட்டுகின்றன. காமராசரின் கருத்துகளை வருங்கால தலைமுறையினரிடத்து மீண்டும் மீண்டும் கொண்டு செல்வதன் மூலம் இந்தச் சமூகம் செழிக்கும். அதற்கு அவரது சொற்பொழிவுகள் வழிகாட்டும் என்ற நூலாசிரியரின் ஆவல் இத்தொகுப்பில் தெளிவாகத் தெரிகிறது. தேச நலனில் அக்கறை கெண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. நன்றி: தினமணி, 24/9/2012.