சொற்றுணை வேதியர்
சொற்றுணை வேதியர், பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும், புலவர் தி.வே. விஜயலட்சுமி, மணிவாசகர் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-235-3.html தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1919இல் பிறந்தவர் எச். வேங்கடராமன். சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர். சென்னை தியாகராய நகரில் உள்ள தருமபுர ஆதீன நிலையத்தில் தினமும் மாலையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை இலவசமாகக் கற்பித்து வந்தார். மேலும் அகில இந்திய வானொலியிலும் அடிக்கடி உரையாற்றி வந்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா. தனது வாழ்நாளில் செய்ய நினைத்து செய்ய இயலாமல் போன பணி, நற்றிணைக்கு உரை எழுத வேண்டுமென்பது. அப்பணியை எச். வேங்கடராமன் மேற்கொள்ள விழைந்தார். சென்னையிலுள்ள உ.வே.சா. நூலகம் சென்று அங்கிருந்த சுவடிகள், உ.வே.சா.வின் கையெழுத்துப் பிரதிகள், ஒப்புமை பகுதிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு வந்து, நற்றிணையின் ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை, கருத்துரை, வினைமுடிபு, ஒப்புமை, விளக்கம் எழுதி நூலாக வெளியிட்டார். தமிழிலக்கியம் இலக்கணம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் நுண்மான் நுழைபுலம் மிக்கவர். கல்லூரி முதல்வர்களும் பேராசிரியர்களும் தமது பெயருடன் சாதிப் பெயரையும் இணைத்துக் கொள்வது மரபாக இருந்த அக்காலத்திலேயே தம் பெயருடன் சாதிப்பெயரை இணைத்துக் கொள்ள மறுத்த பண்பாளர். இந்நூலில் எச். வேங்கடராமனின் குடும்பத்தினரும், அவருடைய நண்பர்களும், அவரது மாணாக்கர்களாகிய ஏராளமான கல்வியாளர்கள், முனைவர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் ஆகியோர் அவரது நினைவுகளை இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளனர். எச். வேங்கட்ராமன் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் உ.வே.சா. விட்டுச் சென்ற ஓலைச் சுவடுகளில் சிலவாவது நூல் வடிவம் பெற்றிருக்கும். அது நிறைவேறாமல் போனது தமிழர்களின் தவக்குறைவே. நன்றி: தினமணி, 7/7/2014.