தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு
தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு, இதழ்கள், சோ. ராஜலட்சுமி, காவ்யா, சென்னை, பக். 280, விலை 250ரூ.
செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், புலமை, மொழியியல் ஆகிய ஐந்து இதழ்களில் மொழியியல் குறித்து வெளியான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்யும் நூல். தமிழில் மொழியியல் ஆய்வுகள் எந்த முறையில் நிகழ்த்தப்பட்டன? என்பதை ஆராய்வதே இந்நூலின் நோக்கம். மொழியியலின் வரலாறு, தமிழுக்கும் பிற மொழிக்கும் உள்ள உறவு, தமிழின் வரிவடிவம், தமிழ் மரபிலக்கணம், ஒப்பு மொழியியல், கோட்பாட்டாய்வுகள் என மொழியியல் குறித்து பல்வேறு திசைகளில் இந்நூல் பயணிக்கிறது. திராவிட மொழிகள் தனிக்குடும்பம், அவை சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை அல்ல என்று கார்டுவெல்லின் கருத்து பற்றி, பிற மொழியியல் அறிஞர்கள் கூறிய கருத்துகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கால்டுவெல்லுக்கு முன்பே எல்லீஸ் ஏழு மொழிகளைத் திராவிட மொழிகள் என்று கூற, கால்டுவெல்லோ 12 மொழிகள் திராவிட மொழிகள் என்று நிறுவினார் என்பன போன்ற தகவல்கள் சுவையானவை. மொழியியலாளர்கள் ஒரு மொழியின் வரி வடிவத்தை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். நமது தமிழில் தொல்காப்பியர் காலத்தில் இருந்தே வரி வடிவம் பற்றிய ஒழுங்குமுறை இருந்திருக்கிறது. தமிழில் வெளியான மொழியியல் ஆய்வுகள் மட்டுமின்றி, பிற மொழி, பிற நாட்டு மொழியியல் ஆய்வாளர்களின் கருத்துகளும் நமது மொழியியல் ஆய்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. நோம்சோம்ஸ்கியின் மொழியியல் ஆய்வுக் கோட்பாடுகள், சசூரின் மொழியியல் கோட்பாடுகள், சமுதாய மொழியியல் கோட்பாட்டை உருவாக்கிய டெல் ஹைம்ஸின் கருத்துகள் போன்றவற்றின் தாக்கத்துடன் செய்யப்பட்ட மொழியியல் ஆய்வுகள் பற்றியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. மொழியியல் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மொழியியல் ஆய்வின் அடிப்படைகளை, வளர்ச்சிகளை எடுத்துச் சொல்லும் நூல். நன்றி: தினமணி, 7/7/2014.