தமிழக ஊரும் பெயரும்
தமிழக ஊரும் பெயரும், தா.குருசாமி தேசிகர், தருமபுர ஆதீனம், குருஞான சம்பத் மடம், பக். 130, விலை 60ரூ.
மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழ் நாட்டைப் பொருத்தவரை எந்த ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிட்டாலும் அப்பெயரோடு ஒரு வரலாறு இணைந்தே இருக்கும். ஆனால், காலப்போக்கில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களின் பெயர்கள் மக்களின் பேச்சு வழக்கில் மாறுபாடடைந்து அவற்றின் உண்மையான பொருளை இழந்து விட்டிருக்கின்றன. இந்நூலில் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்களைப் பல கோணங்களில் ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். ஆசிரியரின் பெரும்பாலான முடிவுகள் ஏற்கத்தக்கனவாகவே உள்ளன. குறிப்பாக, தாராபுரம் என்பதன் பழம்பெயர் இராசராசபுரம் என்றும் சோழவந்தான் என்பதன் முந்தைய பெயர் சோழாந்தகனூர்ச் சதுர்வேதமங்கலம் எனவும் பிசுக்குடி என்று தற்போது அழைக்கப்படும் ஊர் பிசிராந்தையார் வாழ்ந்த பிசிர்க்குடி எனவும் பழநிக்கு பழைய பெயர் பொதினி எனவும் கூறியிருப்பது வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பவையாகும். ஆனால், காரைக் காலம்மையாரோடு தொடர்புடையதால்தான் அவ்வூர் காரைக்குடியாயிற்று என்று ஆசிரியர் கூறுகிறார் (மேலும் அவ்வூரிலுள்ள கொப்புடையம்மன் காரைக்காலம்மையாரே என்றும் கூறுகிறார்). ஆனால், காரைச்செடிகள் அதிகம் இருந்ததால் காரைக்குடிக்கு அப்பெயர் வந்தது என சி.வா.ஜ. ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சிராப்பள்ளி என்ற ஊரின் பெயர் திருமுறைகளில் திருச்சிராப்பள்ளி என்று வழங்கப்படுவதாகவும், நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் நன்றுடையானை என்று தொடங்கும் பதிகத்தில் சம்பந்தர் சிராப்பள்ளி என்றுதான் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். ஊர்ப் பெயரைப் பற்றிய ஆய்வுகள் தமிழில் மிகவும் குறைவே. ரா.பி. சேதுப்பிள்ளையைத் தொடர்ந்து ஊர்ப் பெயர் ஆய்வில் இந்நூலாசிரியர் ஈடுபட்டிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். வேறு பலரும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடும்போதுதான் ஊர்ப்பெயர் குறித்து விளங்காத பல உண்மைகள் விளங்கும். நன்றி: தினமணி, 7/4/2014.