குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன?

குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன?, தமிழில் அ. முத்துக்கிருஷ்ணன், வாசல் மற்றும் தலித் முரசு, சென்னை, பக். 104, விலை 130ரூ.

அந்தியின் ஆதாரம் தெகல்கா செய்த புலனாய்வுகளின் தமிழாக்கம் குஜராத் படுகொலைகள் பற்றிய பதறவைக்கும் தகவல்களைத் தருகிறது. நாடெங்கும் உள்ள மதவாத அமைப்புகள் இந்த 16ஆவது மக்களவைத் தேர்தலை மோடியின் முகமூடிகளை அணிந்துகொண்டே மக்களுக்குக் காட்டுகின்றன. ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பலூன் பிம்பம் மெதுவாகக் காற்றில் அசைந்தாடுகிறது. இந்தத் தருணத்தில் வந்துள்ளது குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன? 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் நாட்டையே மௌனத்தில் உறைய வைத்தன. தப்பிக்கவே முடியாத நிலைக்கு முஸ்லிம்களைத் துரத்தி அவர்களைக் கொன்று அடித்துக் கொண்டாடி ஒரு தீவிர வன்முறையைக் கொட்டித் தீர்த்தனர் இந்து மத வெறியர்கள். மதசார்பற்ற பொதுவெளியில் இயங்கும் மனித உரிமைகளுக்கான அமைப்புகள், ஊடகங்கள் இந்த வன்முறைகளைக் கண்டித்தன. தெகல்கா இது குறித்து நடத்திய புலனாய்வில் இத்தாக்குதலில் ஈடுபட்ட இந்துத் தீவிரவாதிகளை அவர்கள் எப்படி இந்தத் தாக்குதலை நடத்தினர் என அவர்கள் வாயாலேயே சொல்லவைக்கப்பட்டு வெளியிட்ட இதழின் தமிழாக்கம் இந்நூல். இதை வாசிக்கும் ஒவ்வொரு வினாடியும் நாம் எத்தகைய அபாயத்தின் இருட்பிடியில் சிக்கியிருக்கிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இஸ்லாமியரைக் கொல்லவும் அவர்களின் சொத்துக்களைச் சூறையாடவும் வேற்று நாட்டின் மீது போர் புரியும் தந்திரத்தின் ஆழத்தை அவர்கள் தோண்டித் துருவி எடுத்துள்ளனர். இந்துத் தீவிரவாத அமைப்புகளின் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங்தள் ஆகியவற்றின் அரசியல் முகமாக இருக்கும் பா.ஜ.கவின் கோர முகமும் சகிக்க முடியாதவை என்கிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ்.ஷாகாக்களில் நடக்கிற கம்புப் பயிற்சிகளுக்குப் பதிலாக ஏ.கே.56ஐ பயன்படுத்தும் பயிற்சியை அவர்கள் வேண்டுகின்றனர். தப்பி ஓட திசையில்லாமல் ஆக்கி அவர்களை வேட்டையாடிய இந்து வெளியர்களை குஜராத் காவல்துறை கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறது. அவர்கள் சீக்கிரமாக வேலையை முடித்துச் செல்ல அவர்களுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. அப்போது இஸ்லாமியர்கள் அகதிகளாகக்கூட மாற முடியாமல் இருந்திருக்கிறார்கள். கொல்பவர்களுக்கே பாதுகாக்கும் வேலையும் இருப்பதால் அவர்கள் இரண்டில் கொல்லும் வேலையினையே தேர்ந்தெடுத்தள்ளனர். சபர்காந்தா என்னும் இடத்தில் மட்டும் 1545 வீடுகள், 1237 வியாபாரத்தலங்கள், 549 கடைகள் அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன. வி.எச்பியின் தலைவர் அனில்படேல் இத்தாக்குதல்களில் காவல் துறையின் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது என்று கூறுவது, இந்து வெறியர்கள் ராக்கெட் லான்ச்சர்கள், வெடிகுண்டுகள் தயாரித்தது, மோதல்களில் வெடிகுண்டுகள் மிகவும் பயன்பட்டதாக அவர்கள் கொக்கரிப்பது என பலவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவரிக்கமுடியாத சோகமும் அச்சமும் சூழ்ந்திருக்கும் வானம் அந்தக் காலத்தில் குஜராத்தின் மீது கவிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். நீதியும் நேர்மையும் எதுவுமில்லாத அவர்களின் வெறி, இஸ்லாமிய ரத்தத்தைக் குடிப்பதற்காகவே இருந்தது எவ்வளவு துயர் நிறைந்த உண்மை என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய கொடுமையான தாக்குதலை நடத்திவிட்டு தன் சொந்த மாநில மக்களின் மேல் கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிட்ட மோடி அது குறித்த எந்த குற்ற உணர்வுமில்லாமல், காரில் செல்லும்போது நாய்க்குட்டி பின் சக்கரத்தில் மாட்டிக்கொள்வதற்காக நான் என்ன செய்ய முடியும் என்று கைகளை விரித்துப் பேசுகிறார். குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்பவர்கள் அங்கு நிலவும் சாதிய வன்முறைகள் குறித்தோ வேலை இல்லாத் திண்டாட்டம் குறித்தோ பேச மறுக்கிறார்கள். உயர்ந்து வளர்ந்த கட்டடங்களும் அந்நிய முதலீடுமே வளர்ச்சி என்றால் அவர்கள் மனித மாண்பை அடைய முடியாதோராகவே இருக்கமுடியும் என்கிறது இந்நூல். ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் அந்த நாட்டின் பழங்குடிமக்களான அபாரிஜின்களிடம் அவர்களைச் சுரண்டியதற்காக மன்னிப்புக் கோரியதாம். அப்படிப்பட்ட கோரலை குஜராத்தில் மோடி செய்யவில்லை. நாட்டு மக்களிடமும் அது பற்றி வாய்திறக்கவில்லை. தான் அம்பானியின் செல்ல வேட்பாளராக இருப்பது குறித்து எந்தப் பதிலும் சொல்லாமல், மாறாக தன்னை அவர் தேநீர் விற்று வாழ்க்கையைத் துவங்கியதற்குப் பெருமை கொள்கிறார். இச்சூழலில் மோடியின் அறியப்படாத முகத்தைக்காட்டி இந்நூல் எச்சரிக்கை செய்கிறது. நன்றி: இந்தியா டுடே, 30/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *