அபிராமி சமயம் நன்றே
அபிராமி சமயம் நன்றே, ராமநாதன் பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 736, விலை 486ரூ.
ஒரு பரம்பொருளுக்கு பல வடிவங்கள், பெயர்கள் ஏன்? இந்நூல் சாக்த சமய நெறியில் நின்று, தாய்த் தெய்வமாகிய அம்பிகையை, சடங்குகள், வேள்விகள் இல்லாமல், எளிய முறையில் சாமானிய மக்களும் வழிபடுவதற்கு ஏற்ற வண்ணம், இனிய தமிழில் அபிராமி அந்தாதியை, அபிராமி பட்டர் தோற்றுவித்தார் எனவும், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சம்பந்தரும், நம்மாழ்வாரும் எவ்வாறு ஓர் உந்துதலால் அருட்பாக்களைப் பாடினரோ, அதேபோல் பட்டரும் அம்பிகையால் ஆட்கொள்ளப்பட்டு பாடினார் எனவும் ஒப்புமைப்படுத்துகிறது. ஆணுருவத் திருமேனியை, மந்திரத்தால் வழிபட வேண்டும். பெண்ணுருவத் திருமேனியை ஸ்ரீ வித்யையால் வழிபட வேண்டும் என கூறுகிறது. ஸ்ரீ வித்யை என்பது, பஞ்சதாசாக்ஷரி மந்திரமும், ஸ்ரீ சக்ர யந்திரமும், குண்டலினி தந்திரமும், நவாவரண வழிபாடும் கொண்டது என, வடமொழி வாணர்களால் வகுக்கப்பட்டது. ஸ்ரீ வித்யை வழிபாட்டு நெறியை ஏற்றும், தவிர்த்தும், மாற்றியமைத்தும், புதியன இணைத்தும் தமிழ் மட்டுமே தெரிந்த நம்மவர்களுக்கு, எளிய முறையில் அபிராமி பட்டர் வழங்கிய வழிபாட்டு நெறியே அபிராமி சமயம். ஆதிசங்கரரால் வகுத்தளிக்கப்பட்ட சவுரம், காணபத்யம், கவுமாரம், சைவம், வைணவம், சாக்தம் ஆகிய ஆறு சமயங்களுக்கும் இவளே தலைவியாய் இருத்தலால், அபிராமி சமயம் தனித்த சமயம் அன்று. ஏழாம் சமயமும் அன்று என இந்நூல் விளக்குகிறது. ஒன்றேயான பரம்பொருளுக்கு பல்வேறு திருநாமங்களும், திருமேனிகளும் ஏன் எனும் வினாவுக்கு, உடனடியாகப் பலனை எதிர்பார்க்கும் அவசரக்கார்கள், தாம் வழிபடும் தெய்வத்தின் திருவருளை உணர்ந்து, தம்மிடமுள்ள தளைகளைக் களைவதற்கேற்ற பக்குவம் வரும்வரை காத்திருப்பதில்லை. யாரோ சொன்னதை வைத்து, மற்றொரு தெய்வத்திடம் மாறிச் சென்று விடுகின்றனர் எனக்கூறுவது புதிய விளக்கமாய் அமைந்துள்ளது. அபிராமி அந்தாதி பாடல்களை அனுபவித்து, அதில் கூறப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளுக்கு தொல்காப்பியர் முதல், பாரதிதாசன் ஈடாக உள்ள சான்றோர்களின் கருத்துக்களையும், சைவத்திருமுறைகள், சாத்திரங்கள், சைவ புராணங்கள், திவ்ய பிரபந்தம் போன்ற எண்ணற்ற சமய நூல்களிலிருந்து மேற்கோள்களையும் ஒப்புமை காட்டி விளக்குகிறது. திண்ணிய கருத்துக்களைக் கொண்டு நுண்ணாய்வு நூலாய் திகழும் இது, ஓர் ஆன்மிகப் புதையல். கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நதியின் அடியில் செதுக்கப்பட்டுள்ள, 1008 லிங்கங்களை தரிசனம் செய்த நூலாசிரியர் உள்ளத்தில் சம்பந்தரைப்போல், நம்மாழ்வாரைப்போல், அபிராமிபட்டரைப்போல் உள்ளொளி எழ, இந்நூலைப் படைத்துள்ளாரோ என, எண்ணத் தோன்றுகிறது. -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 17/8/2014.