கபிலர்

கபிலர், ந.மு.வேங்கடசாமி நாடர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 144, விலை 70ரூ.

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டினரும் தத்தம் முன்னோர் வரலாறுகளைத் தெரிந்து கொள்ள அவாவுகின்றனர். நம் முன்னோராகிய தமிழ் மக்கள் பழைய நாளில் பல துறைகளிலும் எத்துணை மேன்மையுற்று விளங்கினார்கள் என்பதனை அக்காலத்தெழுந்த தமிழ் நூல்களினின்றும் தமிழ் மொழியின் திருந்திய நிலையினின்றும் அறிந்து கொள்ளலாகும். அதைக் கருத்தில் கொண்டே நல்லிசைப் புலவர்களைக் கொண்டு ஆராய்ச்சி முறையில் சிறந்த முறையில் எழுதவித்து, வெளியிடுவதை ஒரு சிறந்த கடனாக மேற்கொண்டுள்ளதாகவும் அந்த வரிசையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இந்நூலை எழுதித் தந்தார் என்றும் பதிப்புரையில் குறிப்ட்டுள்ளார் த.வே.உமாமகேசுவரனார். குறிஞ்சித் திணை பாடுவதில் தலைசிறந்தவர் கபிலர். அதனால் இவர் குறிஞ்சிக் கபிலர் என்றே போற்றப்படுகிறார். கபிலரை பற்றிப் பலவாறாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இந்நூலில் குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி மிகவும் விரிவாகவே எழுதப்பட்டுள்ளது. கபிலரது வாழ்க்கை வரலாறு, பழைய பாடல்களின் உதவியோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளது. மேலும் நிறைய உவமைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கபிலரின் பெயர்க்காரணம், பிறந்த இடம், குலம், சமயம், காலம், பெருமை, கபிலரைப் பாடியோர், கபிலரால் பாடப்பட்டோர், மற்றைய அகப்பகுதிகள், புறப்பொருட் பகுதியும் பிறவும் என ஒன்றுவிடாமல் நா.மு.வேங்கடசாமி நாட்டார் பதிவு செய்திருக்கிறார். பிற்சேர்க்கையாக வே. ரெட்டியாரின் கபிலர் ஆராய்ச்சியும் இணைக்கப்பட்டுள்ளது கபிலர் பற்றிய மேல் ஆய்வுக்குப் பெரிதும் உதவும் நூல். நன்றி: தினமணி, 8/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *