தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்
தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும், பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. பூபதி, ஆ. அறிவழகன், பா. சம்பத்குமார், ச.வீரபாபு மற்றும் அறுவர், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 560, விலை500ரூ.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ், அகாதெமி, குடியேற்றம் தமிழ்ச்சங்கம் மற்றும் செம்மூதாய் பதிப்பகம் இணைந்து, சென்னையில் நடத்திய பன்னாட்டுக் கருத்ரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைய காலம் தொட்டு நம் தமிழ் சமூகத்தினர் பலவிதமான மரபுகளைக் கடைப்பிடித்து வந்துள்னர் என்பதற்குத் தொல்காப்பியமே சான்று. நம் தமிழ் மரபு எவ்வாறு இருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களே சிறந்த ஆவணங்களாகத் திகழ்கின்றன. இன்றைக்கு அம்மரபுகளிலும் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன – நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் சில இன்றும் தமிழ்ச் சமூகத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டும், பல கைவிடப்பட்டும் இருப்பதைக் காணமுடிகிறது. காலந்தோறும் தமிழ்ச் சமூகம் பல்வேறு ஏற்றங்களையும் மாற்றங்களையும் அடைந்திருக்கிறது. இந்தபோதும், ஏற்றம் தந்த மாற்றங்களையே நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். தமிழன் இழந்த வாழ்க்கையும், அடைந்த மாற்றங்களும் போதுமானது. இனியாவது வீறுகொண்டு விழித்தெழுவோம் என்கிற பதிப்பாசிரியர் க. சதாசிவத்தின் ஏக்கமும் நம் பண்டைய தமிழ் மரபுகளைத் தக்கவைத்து, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற விருப்பமும்தான் இப்படியொரு தொகுப்பு உருவாகக் காரணமாகி இருக்கிறது. கட்டுரைகளின் ஒவ்வொன்றும் இன்றைய காலத்திற்கேற்ற மரபுகளைப் பதிவு செய்துள்ளன. கல்விமுறை, மனித வாழ்வியல், விளையாட்டு, உணவு முறை, வரி, இசை கூத்து, விந்தோம்பல், உறவமுறை, அரசியல், தொழில்நுட்பம், நாட்டியம், கடமை, தொன்மச் சிறப்பு, இறைக்கோட்பாடு, சமூக மேம்பாடு, பெண்ணியச் சிந்தனை, மாமியார் மருமகள் உறவு, திணை நிலைப் பிரவு முதலிய பல்வேறு தலைப்புகளில், மொத்தம் 142 ஆய்வுக் கட்டுரைகளும் நம் தமிழர்தம் மரபைப் போற்றிப் புகழ்கின்றன. காலமறிந்து கூவிய சேவல் போல இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. நன்றி: தினமணி, 4/8/2014.