குறளறம்

குறளறம், திருவள்ளுவர் பதிப்பகம், விழுப்புரம், பக். 240, விலை 150ரூ.

திருக்குறள் வெண்பாவால் ஆனது. அதை விருத்தப்பாவில் விளக்கம் அளித்து அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர். முயற்சியும் புதிது. அவர்தரும் கருத்துரைகளும் புதிது. வாழ்க்கை நிலையற்றது என்று வேதனைப்படுவோர் கூட இவரின் விளக்கத்தால்  உற்சாகம் அடையலாம். திருமூலர், வள்ளலார், வேதாத்ரி, மகரிஷி ஆகியோரின் தாக்கம் நூலில் அதிகம். 1330 குறளையும் எளிதாகப் படிக்க இந்நூலை ஒருமுறை வாசித்தால் போதுமானது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 13/8/2014.  

—-

வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள், கோ. செங்குட்டுவன், ப.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம், பக். 258, விலை 200ரூ.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊர்களில் 50 ஊர்களின் வரலாற்றுப் பெருமைகளைக் கூறும் நூல். வீரமணம் எய்தியவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. ஆனால் விலங்குகளுக்கும், அதுவும் கோழிக்கு நினைவுக்கல் அரசலாபுரம் என்ற ஊரில் எடுக்கப்பட்டுள்ளது. எண்ணாயிரம் என்ற ஊரைச் சேர்ந்த சமணர்கள்தான் மதுரையில் கூன் பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நாலடியாரை இயற்றினார்கள். திண்டிவனம் பேருந்து நிலையத்தின் பின்புறம் பரந்து விரிந்து காணப்படுகிறது கிடங்கில் ஏரி. இது கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பனைப்பூங்கிழார் தம்பி குமரன் என்பவரால் வெட்டப்பட்டதாகும். கூனிமேடு என்ற கிராமம், சின்ன குவைத், சின்ன சிங்கப்பூர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு வசிக்கும் பெரும்பாலான ஆண்கள் வேலை பார்ப்பது வெளிநாட்டில்தான். இவர்களுக்காகவே 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்க தனி தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது. கிராமத்தின் வரலாறு, அங்கே கிடைத்த கல்வெட்டு, பாறை ஓவியங்கள் என்ற எல்லைக்குள் சுருங்கிவிடாமல், இவை போன்ற பல சுவையான தகவல்களோடு சொல்லப்பட்டுள்ளது. வரலாற்று நூல் என்றால் முகம் சுளிப்பவர்கள் தங்கள் கருத்தை இந்நூலைப் படித்தால் மாற்றிக்கொள்வார்கள். நன்றி: தினமணி, 4/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *