என் ஆசிரியப்பிரான்
என் ஆசிரியப்பிரான், கி.வா. ஜகந்நாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோவை, பக். 192, விலை 145ரூ.
தமிழின் மிகச் சிறந்த தன் வரலாற்று நூலான உ.வே. சாமிநாதையரின் என் சரித்திரம் நூலின் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க வகையில், அந்நூலில் இடம் பெறாத அவர் வாழ்வில் நிகழ்ந்த பல முக்கிய சம்பவங்களைச் சுவையாகவும் சுருக்கமாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் உ.வே.சா.வின் மாணாக்கரான கி.வா. ஜகந்நாதன். ஒவ்வொரு சம்பவத்தையும் படிக்கும்போதும் பழந்தமிழ இலக்கியங்களைத் தேடியெடுத்துப் பதிப்பில் உ.வே.சா.வுக்கு இருந்த அளப்பரிய ஆர்வமும், அந்தப் பணியில் அவருக்கு நேர்ந்த இன்னல்களும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் மேற்கொண்ட விடா முயற்சியும், தமிழுலகம் அவரை நடமாடும் தமிழ்த் தெய்வமாகவே மதித்துப் போற்றியதும் புலப்படுகிறது. இராமநாதபுரம் பாண்டித்துரை தேவர் உ.வே.சா.வின் தமிழ்ப்பணியைக் கண்டு மகிழ்ந்து அவருக்கு ஒரு கிராமத்தை தானமாகக் கொடுக்க முன்வந்தபோது, இருப்பதைக் கொண்டு செட்டாக வாழத்தெரிந்தவன் நான். தங்களிடமிருந்து அவ்வளவு பெரிய கொடையை ஏற்றால் அது என் மனதுக்கு சம்மதம் ஆகாது என்று கூறி உ.வே.சா. மறுத்தது, தனது ஆசிரியரான தியாகராச செட்டியார் பயன்படுத்திய மேசையைப் பெறுவதற்காக அவர் அலைந்த அலைச்சல், திருச்சிராப்பள்ளியல் நடந்த பள்ளிக்கூட விழா ஒன்றில், பழந்தமிழ் நூல்களையெல்லாம் தமிழ்த்தாய்க்கு அணிகலன்களாக்கி அவர் பேசிய பேச்சு, சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றலாகி வருவதற்கு ஒரு வாய்ப்பு வந்தபோது, அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த ஒரு பெரியவருக்கு அதனால் இடையூறு ஏற்படக்கூடுமென்பதால், சென்னைக்கு வருவதை உ.வே.சா. தவிர்த்தது, தனக்கு உடனிருந்து உபகாரம் செய்பவர்களுக்காக இராமநாதபுரம் சேதுபதி மன்னர் மாதம் முப்பது ரூபாய் அனுப்பிக்கொண்டிருந்ததைப் பெற்றுக்கொண்டிருந்த உ.வே.சா. சில மாதங்கள் கழித்து, தன்னுடன் இருந்து உபகாரம் செய்பவர் எவரும் இல்லாததால் இனி பணம் அனுப்ப வேண்டாம் என்று சேதுபதி மன்னருக்கு கடிதம் எழுதியது, நன்னூலுக்கு சிறந்த உரையென உலகோரால் போற்றப்படும் சிவஞான முனிவர் உரையில் மேற்கோள் காட்டப்படும் பல செய்திகள் மயிலை நாதர் உரையில் இருப்பதையறிந்து அந்த உரையைத் தேடிப் பதிப்பித்தது, புதுச்சேரியில் பாரதியாரோடு சந்திப்பு ஏற்பட்டது – இப்படி ஏராளமான வியப்பூட்டும் தகவல்கள் இந்நூல் முழுவதும் விரவியிருக்கின்றன. விரிக்கின் பெருகும். உ.வே.சா.வின் வரலாறு என்பது தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமல்லாது, முக்கியமான பகுதியுமாகும் என்பதைத் தெற்றென விளக்குகிறது இந்நூல். தமிழறிந்தோர் அனைவரும் அவசியம் படித்துப் பயனுற வேண்டிய நூல் இது. நன்றி: தினமணி, 28/9/2014.