பட்டம் ஒரு தலைமுறை கவசம்
பட்டம் ஒரு தலைமுறை கவசம், கி. முத்துச் செழியன், காவ்யா வெளியீடு, சென்னை, பக். 436, விலை 400ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-362-3.html மாணவர்கள் பல ஆண்டுகளாக முதலீடு செய்த கடின உழைப்பின் பலனைப் பெறும் நாள்தான் பட்டம் பெறும் நாள். பட்டம் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, பட்டமளிப்புக்குத் தயார் செய்யும் கல்வி நிறுவனத்தினரும் பயன்பெறும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றியுள்ள நூலாசிரியர், உலக பல்கலைக்கழகங்களின் வரலாறு, பட்டமளிப்பு விழாக்களின் தொடக்க காலம், அவற்றின் வரலாறு, விழாக்களின் நடைமுறைகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை எளிய தமிழில் விளக்கியுள்ளார். பட்டம் பெறுவதற்கான தனி உடைகள் 12-13ஆம் நூற்றாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கமென்ஸ்மெண்ட், கான்வோகேசன் போன்றவற்றுக்கான வேறுபாடு போன்ற நுட்பமான தகவல்கள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன. நூலாசிரியர், தான் துணை வேந்தராகப் பணியாற்றிய காலத்தில் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்திய பட்டமளிப்பு விழா உரைகளைத் தொகுத்து இணைத்துள்ளார். அத்துடன் மகாத்மா காந்தி, ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அண்ணா துரை போன்ற இந்திய பிரபலங்களின் பட்டமளிப்பு விழா உரைகளையும், உலக பிரபலங்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் ஹெச்.டபிள்யு. புஷ், பில் கேட்ஸ் போன்றோரின் பயனுள்ள பட்டமளிப்பு விழா உரைகளையும் இந்நூலில் இணைத்திருப்பது மேலும் சிறப்பு சேர்க்கிறது. “சந்தைத் தேவைகளுக்கும் சமுதாய எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றவிதத்தில் உயர் கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் இருக்க வேண்டும். இருப்பினும் கல்வி வேலை பெறுவதற்கு மட்டுமே அல்ல, அது ஒரு சமுதாய மாற்றத்துக்கான பெரிய சக்தி என்று கூறும் நுலாசிரியர், கல்வி நிறுவனங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அறிஞர்களாகவே வெளிவரும் மாணவர்கள், இனி நல்ல மனிதர்களாகவும் வெளிவர இதுபோன்ற பட்டமளிப்பு விழா உரைகள் தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புவதில் தவறில்லை. பட்டமளிப்பு விழா நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 10/11/2014.