கருத்தும் எழுத்தும்

கருத்தும் எழுத்தும், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 150ரூ.

புத்தக வாசிப்பு என்பது வாசகனுக்கு பல்வேறு அனுபவங்களையும், அறிவாற்றலையும் தரக்கூடியது. ஒரு வாசகனுக்கு வாசிப்பில் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு வேறெதுவும் இல்லை. தேடித் தேடிப் படிக்கின்ற வாசகனுக்கு இன்னொரு தேடலையும் கொடுக்கின்ற நூல்தான் கருத்தும் எழுத்தும். பல கருத்துகளை, சிந்தனைகளை எத்தனையோ நூல்கள் பேசியிருக்கின்றன. ஆனால் எழுதப்பட்ட பல நூல்கள் பற்றி பேசுவதுதான் கருத்தும் எழுத்தும் என்ற இந்த நூல். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் தொடங்கி, ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல் என்ற நூல் வரையிலான 25 நூல்கள் பற்றி பல்வேறு கருத்துகளை நூலாசிரியர் அலசி ஆராய்ந்துள்ளார். நீல. பத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் என்ற நாவலைப் பற்றி குறிப்பிடும் போது தமிழக்குள் தனக்கென ஒரு மொழியை உண்டாக்கிக் கொண்டு அதன் வழியாக நாவலை எழுதியிருக்கிறார். இந்நாவலில் சுற்றமும் நட்பும், நடவடிக்கைகளும், மலையாள மொழி சார்ந்து இருக்கிறது. ஆனால் நாவல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இலக்fகியம் படைக்க மொழி தடையில்லை என்பதை இந்நூல் உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்க்குமரி என்ற நூலில் கண்மணி ராஜம் என்ற தன் சின்னஞ்சிறு மகளின் இறப்பு தாளாமல் ச.து.சு.யோகியார் எழுதிய துக்ககரமான அந்த நெடுங்கவிதைக்காகவே அவர் சிறந்த கவிஞராக அறியப்பட்டார். அவரைப் பற்றி சா. கந்தசாமி சொல்லியருக்கும் விதம் யோகியாரின் நூலை படிக்கத் தூண்டுகிறது. இது போல் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றையும் எடுத்து கருத்தும் எழுத்துமாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். ஸ்டீபன் கிரேன் தனது கடல் அனுபவத்தை அவர் நூலில் வடித்துள்ள விதம் யதார்த்த இலக்கியத்தின் உச்சம் என்று கவிழாத படகு என்ற கட்டுரையில் வர்ணித்துள்ளார். பல்வேறு நூல்களை ஒரே தொகுப்பில் படித்த அனுபவத்தைக் கொடுக்கும் அற்புதமான நூல் இது. -நன்றி: தினமணி, 8/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *