பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்
பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், ப. மருதநாயகம், தமிழ்ப்பேராயம், காட்டாங்குளத்தூர், பக். 272, விலை 150ரூ.
உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் மொழியேயாகும். தமிழ்ச் சொற்கள் பலவும் இன்றைக்கும் கிரேக்கம், சீனம், கொரியம், லத்தீன் முதலிய பிறமொழிகளிலும் காணப்படுகின்றன. பிறமொழிச் சொற்களுக்கு வேர்ச்சொல்லாக இருப்பது தமிழ்தான். தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல் போன்றவை உலக அளவிலும் பரவியிருக்கின்றன என்பதற்கு மொழியியலாளர்களின் ஆய்வுகளே தக்க சான்றாகத் திகழ்கின்றன. எபிரேய விவிலியத்துப் பழைய ஏற்பாட்டில் உள்ள சிறப்புக் கூறுகளை கைம் ராபின் என்பவர் கபிலரின் குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை முதலிய அகப்பாடல்களின் வழி அடையாளம் கண்டிருக்கிறார். உரோமானிய அறிஞரான செனகா இலத்தீனில் நாடகங்களும்தத்துவக் கட்டுரைகளும் எழுதியவர். இவர் கி.மு. 4-5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதுகின்றனர். அவர் தமது கட்டுரைகளில் திருவள்ளுவரைப் பற்றி எழுதியிருக்கிறார். வடமொழி அறிஞரான பாசகவி (பாசன்) எழுதிய 13 நாடகங்களில் ஏழு நாடகங்கள் மகாபாரதப் பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு நாடகங்கள் இராமாயணக் கதையைத் தழுவியவை. இரண்டு நாடகங்கள் மன்னன் உதயணன் பற்றியவை. மேலும் முருகனின் வீரதீரச் செயல்களும் குறுந்தொகை, புறம், மலைபடுகடாம், சிலப்பதிகாரம் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேபோல் சான்றோர் கவிதையும் காளிதாசனும், திருக்குறளும் கௌடலீயமும், திருக்குறளும் சுக்கிர நீதியும் பிராகிருதத்தில் அகநானூறும் கதாசப்தசதியும் (தமிழ் அகமரபு) ஆதிசங்கரரும் தமிழும் என மொத்தம் ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள் பிறமொழி இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்களின் தாக்கம் எவ்வாறு இருந்தன என்பனவற்றுடன் பல அரிய தகவல்களையும் அள்ளித் தருகின்றன. ஆய்வாளர்களிடமும் தமிழறிஞர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 3/11/2014.