சிந்தனைச் சுடர்கள்
சிந்தனைச் சுடர்கள் (சிகரம் தொட சிறகு தரும் சிறுகதைகள்), யுவ சக்தி, யுவசக்தி வெளியிடு, சென்னை, பக். 64, விலை 20ரூ.
இளைஞர் நலனை மையமாகக் கொண்டு இச்சிறு நூலில் உள்ள 30 (சிறுகதைகளும் புராணங்கள், சொற்பொழிவுகள், நூல்கள், இணையதளங்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் வாழ்வியலோடு தொடர்புடையவை. இளைய தலைமுறையைத் தட்டி எழுப்பக்கூடியவை. கதையின் கருவைப் பிரித்திருக்கும் நேர்த்தி, பரிணாம வளர்ச்சி, விரிவடைதல், மனவுறுதி, ஈடுபாடு, இலக்கறிதல், பேராசை, மனம், அளவுகோல், தூண்டுகோல், பண்புநலன், முன்னுதாரணம் என விரிகின்றன. ஒவ்வொரு கதையும் திருவள்ளுவர், விவேகானந்தர், பாரதியார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, அமுதபாரதி போன்றோரின் வைர வரிகளுடன் தொடங்குகின்றன. குறிப்பாக எண்ணித் துணிக கருமம் என்ற திருக்குறள், நோக்கத்துடன் வாழும் மனிதன் 10 ஆயிரம் தவறுகள் செய்தால் எந்த நோக்கமும் இல்லாதவன் 50 ஆயிரம் தவறுகள் செய்கிறான் என்ற விவேகானந்தரின் கூற்று, இனி என்னைப் புதிய உயிராக்கி மதி தன்னை மிகத் தெளிவுசெய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் என்ற பாரதியாரின் கவிதை வரிகள் ஆகியவற்றுடன் தொடங்குகின்றன கதைகள். பொய்கூறி தேர்வு எழுதாமல் தப்பித்த மாணவர்கள் மூவரின் தர்ம சங்கடத்தை வெளிப்படுத்தும் அந்த இரு வினாக்கள் துணிவு பற்றி பேசுகிறது. விருதுக்காக விரதம் இருப்பதை விட தகுதிக்காக தவம் இருப்போம் என்ற குறிஞ்சியின் வைர வரிகளோடு உள்ள கதை, பாராட்டுக்காகப் பொய் கூறி கழுதையின் அண்ணனான பத்திரகை நிருபரின் பரிதாப நிலை யாருக்கும் வரக்கூடாது. இக்கதை பண்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. காரைத் துரத்தும் நாயின் செயல் நல்ல நகைச்சுவை. அனைத்துக் கதைகளும் வாழ்வியலை நகைச்சுவையோடு வளப்படுத்தி, சிகரம் தொட சிறகுகளைத் தருகின்றன. நன்றி: தினமணி, 5/10/2014.