நக்சல் பாரி முன்பும் பின்பும்
நக்சல் பாரி முன்பும் பின்பும், ஆங்கில மூலம் சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன் விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்.
ஒரு கம்யூனிஸ்ட் வாக்குமூலம் இந்திய மக்களுக்கு இன்னமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் துர்த்துக் கொள்வதற்காக அவர்கள் பல்வேறு வண்ணங்களில் அரசியல் இயக்கங்களைச் சமுதாயத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் நக்சல் பாரி இயக்கமும் ஒன்று. அதன் முக்கிய பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ். சில மாதங்களுக்கு முன்புதான்96 வயதில் அவர் காலமானார். அவர் தனது இறுதிக் காலத்தில் நக்சல்பாரி முன்பும் பின்பும் எனும் நாவலை எழுதினார். அதை கோவேந்தன் தமிழாக்கி உள்ளார். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியா ஒரு புரட்சியின் விளிம்பில் இருந்தது. அதன் வேகத்தை காங்கிரஸ் மட்டுப்படுத்தியது. அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களுக்குத் தலைமை தாங்கும் மனநிலையில் இல்லை என நூலாசிரியர் விமர்சிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த மார்க்சிஸ்ட் கட்சியும் முற்போக்கானதாக இல்லாத பின்னணியில் நக்சல்பாரி இயக்கம் எழுந்தது. அது இந்திய அரசின் மீதான மயக்கங்களைக் கைவிட்டதாக இருந்தது என்கிறார் அவர். நக்சல் பாரி இயக்கத்தினர் சீனா சென்று சீன அதிபர் மாவோவைச் சந்தித்தனர். அவர்களிடம் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சொல்லிக் கொடுத்ததை சீன எல்லையைக் கடந்தவுடன் மறந்துவிட்டு உங்கள் நாட்டின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுங்கள் என்று மாவோ வலியுறுத்தியதாக நூல் தெரிவிக்கிறது. நக்சல்பாரி இயக்கத்தின் நிறுவனர் சாரு மஜும்தார் தனிநபர்களை அழித்தொழிப்பதை இயக்கத்தின் முக்கியக் கொள்கையாக அறிவித்தது மார்க்சியத்தின் அடிப்படையான இயங்கியல் அறிவியல் பார்வைக்கு மாறானது என நூல் எதிர்க்கிறது. இந்திய கம்யூனிஸ இயக்க வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியைப் பற்றிய வரலாற்று ஆவணம் இது. அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்தவரே அதனை எழுதியிருப்பதால் அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. -த. நீதிராஜன். நன்றி: தமிழ் இந்து, 1/11/2014.