வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி
வேர்வையின் வெகுமதி, வெ. இறையன்பு, குமுதம் பதிப்பகம்.
தவத்தை விட வேலையே முக்தி தரும் உழைப்பை போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும், வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி என்ற நூலை அண்மையில் படித்தேன். குமுதம் பப்ளிகேஷன், நூலை வெளியிட்டுள்ளது. உழைப்பின் பெருமையை, மகத்துவத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் போற்றுகிறது. புராணங்கள், வரலாறு, தற்கால நிகழ்வுகள் மூலம், உழைப்பின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் விளக்குகிறார். ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை செய்தால் அவர் வேலையின் விசுவாசி. அவரே 12 மணி நேரம் வேலை செய்தால் முதலாளி. ஒவ்வொரு தொழிலாளியும் தன்னை முதலாளியாக எண்ணி பணியாற்ற வேண்டும். அதேபோல் ஒவ்வொரு முதலாளியும், தன்னை ஒரு தொழிலாளியாக பாவித்து செயல்பட வேண்டும் என நூல் எடுத்துரைக்கிறது. நாரதர் காட்டு வரியாக சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒருவர் தவம் செய்கிறார். அவரைச் சுற்றி புற்று வளர்ந்துள்ளது. தவம் செய்து கொண்டிருந்தவர் நாரதரைப் பார்த்து எனக்கு எப்போது முக்தி கிடைக்கும்? என்கிறார். ஆண்டவனைப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் என நாரதர் பதில் சொல்கிறார். இன்னும் கொஞ்ச தூரம் நாரதர் சென்றபோது, அங்கே ஒருவர் பெரும் மகிழ்ச்சியில் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார். அவரும் தனக்கு எப்போது முக்தி கிடைக்கும்? என நாரதரிடம் கேட்கிறார். ஆண்டவனைப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் என அவருக்கும் நாரதர் பதில் சொல்கிறார். ஆண்டவனைப் பார்த்துவிட்டு திரும்பி வந்த நாரதர், தவம் செய்து கெண்டிருந்தவரைப் பார்த்து, உனக்கு இன்னும் நான்கு பிறவிகள் கழித்து முக்தி கிடைக்கும் என்றும், நடனம் ஆடிக்கொண்டிருந்தவரிடம், எதிரே உள்ள புளியமரத்தின்இலைகளை எண்ணிவிட்டால் உனக்கு முக்தி கிடைக்கும் என்றும் சொல்கிறார். நூலாசிரியரின் இந்த உதாரணம், தவத்தை விட வேலையே முக்திக்கு வழி வகுக்கும் என்கிறது. -குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆதீனகர்த்தர், குன்றக்குடி ஆதீனம், நன்றி: தினமலர், 7/9/2014.