தீப்பற்றிய பாதங்கள்
தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ.
தாழ்த்தப்பட்ட மக்கள் கையேந்தவுமில்லை; அங்கீரம் கேட்கவுமில்லை. கன்னட எழுத்தாளர் டி.ஆர்.நாகாஜன் எழுதிய தீப்பற்றிய பாதங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் ராமானுஜம் என்பவரால் தமிழில் மொழிபெயர்த்து புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இரு மொழிகளைக் கடந்து, தமிழில் வந்தாலும், மண்ணின் மனம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்நூலுக்கு ஆசிஷ் நந்தி முன்னுரை எழுதியுள்ளது, கூடுதல் பலமாக உள்ளது. பூர்வ குடிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என, தனியான கதை, கவிதை, இசை, வழிபாடு, தொழில், வாழ்வியல் முறை உள்ளன. இவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மரபணு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை நூல் ஆசிரியர் விளக்குகிறார். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய கருத்துக்கள், அறிவு சார் தளத்திலும், கல்வி சார் தளத்திலும் தனித்தனியாக செல்கிறது. இவ்விரு தளங்களையும் ஒரு புள்ளியில் இணைப்பது தான், நூல் ஆசிரியரின் கட்டுரைகள். தாழ்த்தப்பட்ட மக்கள், யாரிடமும் விடுதலை கோரவில்லை. ஒரு தனிநபரிடமிருந்து, இரக்கத்தை கையேந்தவுமில்லை. அங்கீகாரத்தை கேட்கவுமில்லை. அவர்களது பாதையை அமைத்துக் கொள்ளத் தேவையான அனைத்தும், மரபு ரீதியாக அவர்களிடம் உள்ளது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பரிந்து பேசி, அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். ஆனால் அவர்களிடம் உள்ள அனுபவ அறிவு, அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தரும் என, ஆணித்தரமாகச் சொல்கிறார் நூல் ஆசிரியர். அதேநேரத்தில் மாறியுள்ள சமூக அமைப்பில், அவர்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தயக்கங்கள் ஏற்படலாம். அதனால் அவர்களது பாரம்பரியத்தை குறைத்து மதிப்பிட முடியாது என கே.ஆர். நாகராஜன் கூறுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை, அவர்களது மரபுகளை பார்வையாளனாக இருந்து பார்க்காமல், அவர்களாகவே வாழ்ந்து கட்டுரைகளை எழுதியுள்ளார். தன்னை ஆதி சூத்திரர் என்பதை, நூல் ஆசிரியர் பெருமையோடு சொல்கிறார். இப்போதைய சமூக சூழலில் தீப்பற்றிய பாதங்கள் நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. -தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர். நன்றி: தினமலர், 2/11/2014.