முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 110ரூ.

நூலாசிரியர் வெ. இறையன்பு, டில்லியில் தன் பயிற்சிக் காலத்தில் இந்தி மொழியின் எதேச்சதிகாரத்தையும், பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டதையும் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக, குறைந்த எல்லையில் தேர்ச்சி பெற்றதை இந்திக்கார்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சாடுகிறார். உச்சத்தில் இருந்த சோழ சாம்ராஜ்யம் பின்னடைவு கண்ட காலத்தில், கம்பன் வாழ்ந்ததால், சோழநாட்டு இளைஞர்களின் இதயத்தில் மறுபடியும் போர்க்குணத்தைப் பாய்ச்ச, யுத்த காண்டத்தில் மட்டும் 4000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்துள்ளார் என்பதும், ‘முதலில் ஒருவன் எதைக் கேட்கிறானோ, அதுவே அவன் மனதில் ஆழமாகப் பதியும் எனும் மனவியல் கூற்றுப்படி, ராமனால் சாபவிமோசனம் பெற்ற, கவந்தன் எனும் அரக்கன், சக்ரீவனின் நட்பை பெற்று சீதையை தேடுமாறு கூறியதாலேயே, சுக்ரீவனுக்கு உதவ, வாலியை கொல்ல நேர்ந்தது என, வாலி வதை படலத்தைப் பற்றிக் கூறுவதும் புதிய சிந்தனை. உலகளாவிய போர்முறைககளையும், போர் உத்திகளையும், கம்பனின் யுத்த காண்டத்தோடு ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார். -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 23/11/2014.  

—-

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம், க. ஸ்ரீதரன், நர்மா பதிப்பகம், பக். 384, விலை 300ரூ.

இந்த நூல் 32 பத்ததிகளாகப் (அடிவைப்பு) பிரிக்கப்பட்டு, மிக எளிய பழகு தமிழில் விளக்கப்பட்டுள்ளது. மேய்ச்சலுக்குச் சென்ற தாய்ப்பசு கன்றின் ஞாபகம் வர மாலை நேரத்தில் விரைவாக, கன்றிடம் ஓடி வருவது போல பாதுகையும் சித்திரகூடத்திலிருந்து (ராமனிடமிருந்து) அயோத்திக்கு ஓடி வந்ததைப் படிக்கும்போது, மகாதேசிகரின் கற்பனைத்திறன் கண்டு வியக்கிறோம்.(பக். 74). அயோத்தியை, பாதுகைகள் ஆண்டபோது (பரதன் ஆண்ட 14 ஆண்டுகளில்) எந்த குழந்தையும் இறக்கவில்லை; பிராயச்சித்தம் தேடும் அளவிற்கு எவ்வித குற்றமும் நிகழவில்லை என்ற செய்தி (பக். 80) யை சுலோகம் 153ல் காணும்போது, தற்போது அந்த பாதுகைகள் ஆட்சி செய்யக்கூடாதா என்ற ஏக்கமே நமககு உண்டாகிறது. பாதுகைகள், சீதாதேவியால் வணங்கப்பட்டதற்கான காரணங்களை 229, 230சுலோக விளக்கவுரையில் படித்து மகிழலாம்.(பக். 104) எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் உள்ள விக்ரக வடிவங்களில் பாதுகையுடன் கூடிய எம்பெருமான் திருமேனியை காண இயலாது. ஆனால் திருவரங்கத்தில் மட்டும் பாதுகையுடன் கூடிய திருமேனியைக் காணலாம் என்ற செய்தியை சுலோகம் 240ல் (பக். 107) படித்து ரசிக்கலாம். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 23/11/2014.

Leave a Reply

Your email address will not be published.