திருமுறைகளில் கலைகள் சமுதாயம் கோயில்கள்
திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள், பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை, பக். 220, விலை 100ரூ.
திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் மூலமாக, சைவத் திருமுறை மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி, அதன் மூலம் பல ஞான நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், சமுதாயம், அருளியல், கலைகள், கோயில்கள் தொடர்பாக பன்னிரு திருமுறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தக்க ஆதாரங்களுடன் அறிஞர் பெருமக்கள் பதினெட்டுப் பேர் விரித்துரைத்துள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் காலத்தில் இருந்து வந்த சமூதாயச்சூழல், அச்சமுதாயத்தை மேம்படுத்த வளப்படுத்த அவர்கள் மேற்கொண்ட சமய நெறிகள் நிகழ்த்திய அற்புதங்கள், வலியுறுத்திய அறநெறிக் கருத்துகள் போன்றவை கூறப்பட்டுள்ளன. சமுதாயத்தில் நாத்திகம் கூடாது. சாதி சமய வேறுபாடு கூடாது. உலகாயதம் கூடாது. ஆண் பெண் சமத்துவ சமுதாயம் வேண்டும். இயற்கை வளம் போற்ற வேண்டும். அன்புநெறிச் சமுதாயம் உருவாக வேண்டும் என மாணிக்கவாசகர் காட்டும் சமுதாயம் என்ற கட்டுரை மூலம் மிக விரிவாக விளக்கியுள்ளார் ஊரன் அடிகள். இக்கட்டுரை இத்தொகுதிக்கு மணி மகுடம் சூட்டியது போல் உள்ளது. மேலும், புற திருமுறைகளில் சமுதாயப் பார்வையுடனான கட்டுரைகளும், திருமுறைகளில் அருளியல் நோக்கில் இறைவன், இறைவியின் இறைஇயல்புகளும், சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலான நால்வகை சைவ மார்க்கங்களும் விளக்கப்பட்டுள்ளன. திருமுறைகளில் பண்ணிசையின் பயன்பாடு, குறிப்பிடப்படும் திருக்கோயில்கள், நாட்டியம் ஆகியவற்றோடு, சேரநாடு, பாண்டியநாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் உள்ள திருக்கோயில்கள் பற்றியி விவரங்களையும் பிற கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. மொத்தத்தில் சைவ அன்பர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 1/12/2014.