திருப்புகழும் திருத்தலங்களும்
திருப்புகழும் திருத்தலங்களும், உரையாசிரியர் சண்முக.செல்வகணபதி, தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 152, விலை 60ரூ.
நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் தொடங்கி, முருகனைப் போற்றிப் பாடும் நூல்கள் பல இருப்பினும், தமிழ் வளம், சொல் வன்மை, தொடை நயம், சந்தப் பொலிவு, கற்பனைத் திறன், பக்திப் பெருக்கு போன்ற கவிதைப் பண்புகளால் தமிழ் பக்தி இலக்கிய வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ். முருகப் பெருமானின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரை தடுத்தாட்கெண்டபோது முத்தைத் திரு பத்தித் திருநகை என்று முதலடி எடுத்துத் தந்த திருப்புகழின் முதல் பாடலில் தொடங்கி, அறுபடை வீடுகள் உள்பட தமிழகத்திலுள்ள முக்கிய ஊர்கள் மற்றும் திருவேங்கடம், திருக்கயிலை உள்ளிட்ட 64 தலங்களில் பாடப்பட்ட திருப்புகழ் பாடல்களின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் அப்பாடல் பாடப்பட்ட தலத்தைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கம், பாடலின் சந்தம், ராகம், தாளம் போன்ற குறிப்புகள், அத்தலத்தைப் பாடியுள்ள பிற அருளாளர்கள், அத்தலத்தில் அவதரித்த மகான்கள், அவ்வூரின் திருவிழாக்கள் போன்ற பல தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பாடல்கள் பதம் பிரித்து அச்சிடப்பிட்டிருப்பது சிறப்பு. ஒவ்வொரு பாடலுக்கான உரையும் எந்தவிதமான ஆடம்பரமோ, பயமுறுத்தலோ இல்லாமல், சாமானியர்களும் புரிந்து கொள்ளும்படியும், விரும்பும்படியாகவும் பக்திப் பெருக்கோடும் உள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பெரும்பாலும் பரவலாக அறியப்பட்ட பாடல்களே இடம் பெற்றிருந்தாலும், வாட்போக்கி, வள்ளியூர், திருவாமூர் போன்ற ஊர்களில் பாடப்பட்ட அதிகம் அறியப்படாத பாடல்களும் இத்தொகுப்பில் உள்ளன. திருப்புகழ் பாடல்கள் முழுவதையும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிற நூல். நன்றி: தினமணி, 15/12/2014.