தேவர் வருக
தேவர் வருக, இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், சென்னை, பக். 160, விலை 125ரூ.
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் தேவர் வருக குறுநாவலும் 6 சிறுகதைகளும் அடங்கிய நூல். நாவலாகட்டும், சிறுகதைகளாகட்டும் வெறும் கதைக என்கிற எல்லையத் தாண்டி, வாழ்க்கை பற்றிய பார்வையைத் தருகின்றன. இன்றைய அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஒருவித கிண்டல் தொனியுடன் விமர்சிக்கும் தேவர் வருக நாவல். அநியாயம், அக்கிரமம் செய்பவர்களைக் கடவுள் கண்டுகொள்ளமலிருக்கிறார் என்று எண்ண வேண்டாம். அவர் ஏதோ ஒரு வடிவத்தில் இப்போதும்கூட அக்கிரமக்காரர்களைத் தண்டித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்ற பார்வையை முன் வைக்கிறது. “லாஜிக்குக்கும் நம்பிக்கைக்கும் சம்பந்தமேயில்லை, லாஜிக்குன் மரணம்தான் நம்பிக்கையின் ஜனனம்” என்று சொல்லும் ‘பிரிய, பிரியாத மனம்’ சிறுகதை, “நம்ம சௌகர்யத்துக்கு ஏத்தபடி இருக்கிறதுதான் சாஸ்திரம்” என்று சொல்லும் ‘வளைசல் என்கிற ரங்கநாதன்’ சிறுகதை, “முதுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தும் ‘இலையுதிர் பருவம்’, “விஞ்ஞான உலகில் பல விசித்திரமான சம்பவங்கள் நடப்பது சாத்தியமே” என்பதைச் சொல்லும் ‘சர்ப்ப யாகம்’ இப்படி இந்நூலில் அடங்கியுள்ள எல்லாக் கதைகளுமே ஏதோ ஒன்றை நமக்குச் சொல்கின்றன. எனினும் இக்ககைளில் விலந்து கருத்துக்களைத் திணித்தல் என்பது அறவே இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பான போக்கில் சுவையாகச் சித்திரிக்கும் கதைகளின் சாராம்சமாகவே இத்தகைய சிந்தனைகள் வாசகர்களை வந்தடைகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நன்றி: தினமணி, 8/12/2014.