நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள்
நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள், ருத்ராங்சூ முகர்ஜி, பெங்குயின் பதிப்பகம்.
வங்க எழுத்தாளர் ருத்ராங்சூ முகர்ஜி எழுதி, பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள்’ (நேரு அண்டு போஸ் பேரலல் லைவ்ஸ்) என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். நேதாஜியை விட, நேரு எட்டு வயது மூத்தவர். இருவரும், பெரும் செல்வ குடுங்பங்களில் பிறந்தவர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர்கள். நேரு நினைத்திருந்தால், அவரது தந்தை வழியில், பிரபல வழக்கறிஞர் ஆகியிருக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் தற்போதைய ஐ.ஏ.எஸ்., போல, ஐ.சி.எஸ்., தேர்ச்சி பெற்றவர் நேதாஜி. ஆனால், இருவரும் விடுதலை போராட்டத்தில் குதித்தனர். காந்தி அடிகளால் ஈர்க்கப்பட்டனர். காங்கிரசின் தலைவராக இருவரும் இருந்துள்ளனர். இடதுசாரி சிந்தனை போக்கையும் கொண்டவர்கள். ஆனால் ஒரு கட்டத்தில், காந்தியின் அகிம்சை போக்கு, விடுதலை பெற்று தராது என, காந்தியின் தலைமையை எதிர்த்தார் நேதாஜி. காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் இரந்தாலும், அவரது அகிம்சை தான் விடுதலை பெற்று தரும் என, காந்தியின் தலைமைக்கு தன்னை அர்ப்பணிக்கிறார் நேரு. ஒரே நேர்கோட்டில், நெருங்கிய நண்பர்களாக இருந்த, நேருவும், நேதாஜியும் பிரிகின்றனர். ஆனால் நட்பு நீடிக்கிறது. அகிம்சை, நாட்டுக்கு விடுதலை பெற்று தராது என, முடிவு செய்த நேதாஜி, ஹிட்லர், முசோலினி போன்றோரை சந்திக்கிறார். இந்திய தேசிய ராணுவத்துக்கு தலைமையேற்கிறார். பின், மறைந்துவிடுகிறார். அவரது மறைவுக்கு, நேரு வெளியிட்ட இரங்கல், அவர்களுக்கு இடையேயான நட்பை உணர்த்துகிறது. ஆனால் நேதாஜி உயிருடன் இருக்கிறார். இமயமலையிலோ, சைபீரியாவிலோ மறைவாக இருக்கிறார். திடீரென ஒருநாள் வெளியில் வருவார். இந்த நாட்டின் பிரச்னைகளை தீர்த்து வைப்பார், என, அவரது ஆதரவாளர்கள் கூறுவதும், நேதாஜி மறைவுக்கு நேரு தான் காரணம் என, சாடுவதும் வருத்தம் அளிப்பதாக, நூலாசிரியர் கூறுகிறார். நேதாஜியைப் போல, நூல் ஆசிரியரும் வங்காளி என்பது குறிப்பிடத்தக்கது. இருபெரும் தலைவர்களின் வாழ்க்கை, அவர்களுக்க இடையே நிலவிய நட்பு, எதிர் திசைக்கு மாறினாலும், நாகரிகம் குறையாத போக்கு, ஆகியவற்றை, இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் அறிந்துகொள்ள இந்த நூல் உதவியாக இருக்கும். -ராதாகிருஷ்ணன், ஐ.பி.எல்., கூடுதல் டி.ஜி.பி., நன்றி: தினமலர், 8/2/2015.