கீதைப் பேருரைகள்
கீதைப் பேருரைகள், ஆசார்ய வினோபா பாவே, காந்திய இலக்கிய சங்கம், மதுரை, பக். 416, விலை 80ரூ.
விடுதலைப் போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்ட ஆசார்ய வினோபா பாவே 1932இல் கீதை குறித்து சிறையில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இந்நூல். சுய தர்மத்துக்குத் தடையாக உள்ள மோகத்தை அகற்றுவதே கீதை உபதேசத்தின் முக்கிய குறிக்கோள் என்கிறார் நூலாசிரியர். உயர்ந்த தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி என்று கூறுவது கீதையின் சிறப்பு. பாராயணம் செய்வதுடன் சிந்திக்கவும். ஆன்ம சோதனை புரியவும் தூண்டுவது கீதை. கர்ம யோகம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? கர்மம் என்றால் என்ன? அகர்மம் என்றால் என்ன? விகர்மம் என்றால் என்ன? சன்னியாசி என்பவர் யார்? யோகிக்கும், சன்னியாசிக்கும் உள்ள வேறுபாடு என்ன? நாம் செய்யும் காரியங்களை கடவுளிடம் ஒப்படைப்பது எப்படி? ஏன்? அதனால் ஏற்படும் பயன் ஒவ்வொரு பொறியையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்தல் என்பதே ராஜ யோகம். மன ஒருமுநைப் பாங்கைப் பெறுவது எப்படி? சமநோக்கு என்பது என்ன? பயிற்சி, வைராக்கியம், விடாமுயற்சி, ஒருமுனைப்பாங்கிலிருந்து முழுமை அடைவது எப்படி, சத்வ, ரஜோ, தமோ குணங்கள் என்றால் என்ன? சத்வ குணத்தை அடைவதற்கான உபாயம் எது? முரணற்ற வாழ்க்கைக்கு வழி எது போன்றவற்றை சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிய உதாரணங்களுடன் ஆசார்ய வினோபா பாவே விளக்கியுள்ளார். நன்றி: தினமணி, 14/2/2015.