புத்தகத்தின் பெருநிலம்
புத்தகத்தின் பெருநிலம், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 238, விலை 210ரூ.
நாட்டார் வழக்காற்றியலில் புலமையாளரான நூலாசரியர், ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக எழுதிய நூல் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தேர்வு செய்யப்பட்ட 22 கட்டுரைகள் சமூகவியல் – மானிடவியல், வரலாறு, சமயம் – தத்துவம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அந்த நூலின் சாராம்சத்தை மிகவும் எளிமையாகவும், சுவைபடவும் விளக்குகின்றன. நூலின் சிறப்புகளை மட்டுமன்றி, அது கூற வந்த, கூறியுள்ள கருத்துகளையும், அதையொட்டிய வரலாற்றுத் தகவல்களையும் கொடுத்து, நூலைப் படித்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்தை வாசகர்களிடம் ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறார் நூலாசிரியர். ‘புத்தகத்தின் பெருநிலம்’ என்ற கட்டுரையில் தமிழ் நூல் அச்சாக்க வரலாறு, தொடக்க காலத்தில் நூல் வெளியீடுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களின் பட்டியல், அச்சக உரிமையாளர்கள், தமிழ் நாவல் வரலாறு போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் என்னென்ன நூல்கள் வெளியாகியுள்ளன? அவை இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை? எப்படி வாசிப்பது? என்பதற்கான வழிகாட்டி இந்நூல். நன்றி: தினமணி, 14/2/2015.