உலகத் தமிழ்க் கவிதைகள் எமது மொழி பெயர் உலகினுள்
உலகத் தமிழ்க் கவிதைகள் எமது மொழி பெயர் உலகினுள், தொகுப்பு செல்வா கனநாயகம், நூல் உரிமை தமிழ் இலக்கியத் தோட்டம், விகடன் வெளியீடு, பக். 288, விலை 250ரூ.
உலகம் முழுவதும் உள்ள 78 தமிழ்க் கவிஞர்களின் இலங்கை, இந்தியா மற்றவை நாடுகளில் வாழும் தமிழர்களின் கவிதைகளை மிக நறுக்காகத் தேர்வு செய்து, அற்புதமானவை, மற்றவர்களுக்கு முன்னுதாரமாக ஒரு நூலை விகடன் பிரசுரம் வாயிலாக வெளியிட்டுள்ளது தமிழ் இலக்கியத் தோட்டம். கவிஞர்களின் பட்டியலை இறுதி செய்வது பெரும் பணி. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கவிஞரின் ஒரு கவிதையை மட்டும் வாசகனுக்கு எடுத்துக் காட்டி, பானைச் சோற்றுக்குப் பதம் பார்க்க வைப்பதும் அரிதினும் அரிது. அதைச் சிறப்பாக செய்திருக்கிறார் கவிதைகளைத் தொகுத்த செல்வா கனநாயகம். தமிழ்க் கவிதைகளில் ஆழ்ந்த ஈடுபாடும், உலகம் முழுவதும் தமிழ்க் கவியுலகில் செயல்படுவோரின் எழுத்துகளின் தொடர் வாசிப்பும் இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்தக் கவிதை ஒவ்வொன்றுக்கும் எதிர்ப்பக்கத்திலேயே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. இந்த மொழிபெயர்ப்பு மற்றைய நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகள், தமிழ்க் கவிதையின் நுட்பத்தை புரிந்துகொள்ளாமல் பக்கத்தைப் புரட்டிவிடக்கூடாது என்ற அக்கறையுடன் இந்த மொழிபெயர்ப்பு தரப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த இரண்டாவது தலைமுறைத் தமிழ்க் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தமிழருக்கும்கூட இந்த மொழிபெயர்ப்பு ஒரு தூண்டுதலாகவும், இலங்கைச் சொல்லாடலின் நுட்பத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. ஒவ்வொரு கவிஞர் பற்றியும் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நிழற்படத்துடன் குறிப்பு அளித்திருப்பதும், தொகுப்பாளரின் ஈடுபாட்டுக்குச் சான்று. இன்றைய தமிழ்ச் சூழலில் அரிதாக மனநிறைவு தரும் புத்தகம். நன்றி: தினமணி, 6/1/201.