கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது, மாயா ஏஞ்சலோ, தமிழில் அவைநாயகன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 336, விலை 300ரூ.

உலகில் இன்றும் எஞ்சியிருக்கும் நிறவெறிக்கு எதிரான போரில் தனது எழுத்தையே ஆயுதமாக்கியவர் ஆப்பிரிக்க – அமெரிக்க எழுத்தாளர் மாயா ஏங்சலோ. தனி தேவாலயம், பொது இடங்களில் வெள்ளையர்களின் சுரண்டல், எங்கும் ஆணாதிக்கம், கேலி, வன்கொடுமைகள் எனப் பல மோசமான அனுபவங்களுடன் வளர்ந்தாலும், அவற்றை மீறி சிலிர்த்தெழுந்த அமெரிக்க கறுப்பினப் பெண்ணான மாயா, பிற்காலத்தில் அடிமைத்தளையை எதிர்க்கும் போரில் முன்னுதாரணமான பெண்மணியாக உயர்ந்தார். எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர், பெண் உரிமைப் போராளி, நடிகை, பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட மாயா ஏஞ்சலோ (1928-2014) தனது சுயசரிதையை ஏழு தனித் தொகுதிகளாக எழுதியிருக்கிறார். அவற்றில் முதல் பகுதி அவரது 17ஆவது வயதில் வெளியாகி அவருக்கு இலக்கிய உலகில் உடனடியாக உறுதியான இடத்தை அளித்தது. 3 வயது முதல் 17 வயது வரையிலான தனது வாழ்க்கை அனுபவங்களைத் தனக்கே உரிய கிண்டலுடனும், கடவுளை விசாரணைக் கூண்டில் ஏற்றும் தார்மீக ஆவேசத்துடனும், அடிமைத்தனத்தையும் நிறவெறியையும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்த குழந்தைப் பருவத்தின் முதிர்ச்சியின்மையையும் இந்நூலில் அவர் எழுதியிருக்கிறார். உலகில் இன்னும் நிறவெறி மாயவில்லை என்பதை உலகிற்கு பொட்டில் அடித்தது போலச் சொல்கிறது மாயாவின் சுயசரிதை. இதனைத் தமிழில் அவைநாயகன் திறம்பட மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தினமணி, 13/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *