அனுமன் கதைகள்
அனுமன் கதைகள், கே. குருமூர்த்தி (மாயூரன்), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 172, விலை 90ரூ.
வாயு புத்திரனாக அவதரித்த ஆஞ்சநேயர், மாருதி என்றழைக்கப்பட்டு பின்னர் அனுமனாக மாற்றம் பெற்றதாக அஞ்சனை மைந்தனின் கதை துவங்குகிறது. சிறுவயதில் அபார சுறுசுறுப்பும் ஆற்றலும் கொண்டு விளங்கிய அனுமன், சூரிய பகவானிடம் வேத சாஸ்திரங்களையும், சகல கலைகளையும் கசடறக் கற்றுத் தேர்ந்ததின் காரணமாக, பிற்காலத்தில் இராமபிரானால், நவவியாகரன் என்ற பாராட்டைப் பெறுகிறார். அனுமனின் பராக்ரமங்களை மிக அழகாக எளிய நடையில் சிறுசிறு கதைகளாகச் சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. சிறுவனான மாருதி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தவத்தில் ஈடுபட்டிருந்த முனிவரின் தவத்தைக் கலைக்க முற்பட, அந்த முனிவரின் சாபத்துக்கு ஆளாகிறார். அந்த சாபம், உன் வலிமையை உணராது போவாய். ஆனால் யாராவது நினைவூட்டினால் உன் வலிமை உனக்குப் புலனாகும் என்பதுதான். அதனால்தானோ அனுமனின் பலம் அருக்கு தெரியாது என்ற வழக்கு வந்தது போலும். அசோக வனத்தில் சீதையைக் கண்டு பேசுவது, வாலில் வைக்கப்படும் தீயால் இலங்கையை எரிப்பது, கருடனின் அகந்தையை அடக்குவது, இராமர் பூஜித்த மணல் லிங்கத்தை அகற்ற முற்படுவது என அனைத்துமே விறுவிறுப்பு. தன்னைப் போன்ற வாயு குமாரனான பீமனைச் சந்திப்பது நகைச்சுவை. தெரிந்த செய்தியானாலும் தெரியாத பல புதிய விஷயங்களும் உள்ளன. குழந்தைகளும் விரும்பிப் படிக்கும் வகையில் அனுமனின் வீரதீரச் சாகசங்கள் சொல்லப்பட்டிருப்பது சுவை. நன்றி: தினமணி, 13/4/2015.