ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சிறப்பு மலர் 2015
ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சிறப்பு மலர் 2015, குமுதம் வெளியீடு, சென்னை, பக். 274.
கிருஷ்ணன் மணியம், மாநாட்டுத் தலைவரான டத்தோஸ்ரீ உத்தமா ச. சாமுவேலு பற்றி எழுதியுள்ள தமிழ்மொழிக் காதலர் கட்டுரை, அவர் தமிழ் மொழி மீது கொண்ட தணியாத தமிழ்க் காதலையும், இளம் வயதிலிருந்து அவர் கடந்து வந்த கரடு முரடான சவால்கள் நிறைந்த பாதைகளையும் விவரிக்கிறது. இதுவரை நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை ஒரு மீள் பார்வை செய்துள்ளார் சு. இராசாராம். மலேசியாவில் தமிழ்க் கல்வி அன்றும் இன்றும் எவ்வாறு இருக்கிறது என்பதை எஸ். குமரனும், மலேசிய தமிழ் குறித்து மோகனதாஸ் ராமசாமியும், இந்தியப் பண்பாட்டின் இருபெரும் தூண்கள் பற்றி வா.செ. குழந்தைசாமியும் எழுதியுள்ள கட்டுரைகளில் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படுகின்றன. வீ. அரசுவின் உலகில் தமிழ்க் குடிகள் புதுமைத்துவ எதிர்கொள்ளல்: பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகள், கவிஞர் புவியரசுவின் மொழிப் பாலம், நாஞ்சில் நாடனின் நாய் பெற்ற தெங்கம் பழம், இரா. திருமாவளவனின் தமிழிசை மீட்போம், ப. சோழநாடனின் என்றென்றும் தமிழிசை மீட்போம், ப. சோழநாடனின் என்றென்றும் தமிழிசை, மணாவின் ஊடகத் தமிழின் ஏற்றமும் சரிவும், ந. முத்துசாமியின் தெருக்கூத்து என்றால் என்ன, நா. மம்மதுவின் தமிழிர் திணைக் கண்ணோட்டம், அ. ராமசாமியின் திருப்புமுனை நாடகங்கள், கமலாதேவி அரவிந்தனின் காயம் பட்டவர்களுக்கு மட்டுமே ரணத்தின் வலிபுரியும் முதலிய கட்டுரைகள் மாநாட்டு மலருக்குச் செழுமை சேர்த்துள்ளன. சுவாமிமலை குபேரன் சிற்பக் கூடத்தில் சிற்பி க. மோகன்ராஜ் உருவாக்கிய தமிழ்த்தாயின் ஐம்பொன் சிலையின் சிறப்புகள் பேசப்பட்டுள்ளன. ந. தர்மலிங்கத்தின் ஒன்று அவன் தாளே இரண்டு அவன் இன்னருள் என்ற கட்டுரை, சிவபெருமானின் மகன்களாக மக்கள் கருதிக்கெண்டிருக்கும் விநாயகர், முருகன் பற்றிய பல ஆகம உண்மைகளை வெளிப்படுத்தி இம்மலருக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. நன்றி: தினமணி, 13/4/2015.