இந்தியாவும் ஈழத்தமிழரும்
இந்தியாவும் ஈழத்தமிழரும் (அவலங்களின் அத்தியாயங்கள்), நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, பக். 320, விலை 250ரூ.
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தனி நாடு கோரும் அமைப்பினரை ஒடுக்கவும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டதுதான் இந்திய அமைதிப் படை (ஐ.பி.கே.எஃப்.). இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப் படை இலங்கையில் தங்கியிருக்க வேண்டும் என இந்தியா, இலங்கையிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளை அடக்கி, இலங்கையில் அமைதியை ஏற்படுத்தச் சென்ற இந்திய ராணுவம், யாழ் பல்கலைக்கழகப் பகுதி, கொக்குவில் பிரேதசம், மருத்துவமனைகள் என ஒவ்வொரு பகுதியிலும் அப்பாவி ஈழத் தமிழர்களைக் கொடுமைப்படுத்திய செயல்கள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்தச் சண்டையின் போது, இந்திய ராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்குச் சிறுவர்களும், பெண்களும், முதியவர்களும்கூட தப்பவில்லை. பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்கிறார் நூலாசிரியர். நூலில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளுக்குத் தொடர்புள்ள புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இது நூலின் உண்மைத் தன்மையை அதன் வீரியத்தை அதிகப்படுத்துகிறது. பல்வேறு ஆபரேன்களை இந்திய ராணுவம் மேற்கொண்டாலும் விடுதலைப் புலிகளின் போர் உத்திகளை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்றும், பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது என்றும் விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்திய அமைதிப் படையின் நடவடிக்கைகளைப் பற்றிய அரிய ஆவணம் இந்நூல். நன்றி: தினமணி, 20/4/2015.