விதையினைத் தெரிந்திடு
விதையினைத் தெரிந்திடு, தொகுப்பு வலம்புரி லேனா, எழில்மீனா பதிப்பகம், தஞ்சை.
அபூர்வ அறிமுகங்கள் ஒரு சமூகத்தின் சிந்தனைமுறை மற்றும் மதிப்பீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 18ம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை தமிழ் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் அச்சிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெரிய நிறுவனங்கள் நடத்தும் பேரிதழ்கள் ஒருபுறம் என்றால், சிறிய தொகையில் குறைந்த அளவில் அடிக்கப்படும் சிற்றிதழ்கள் மறுபுறம். குறிப்பிட்ட சமூகத்தினர், ஒரே ஊரில் வசிப்பவர்கள், தொழில் சமூகத்தினர், அரசியல் குழுவினர், புலவர்கள், அறிஞர், கலை இலக்கியக் குழுவினர் எனப் பல தரப்பினரும் நடத்தும் சிற்றிதழ்கள் தமிழகம் முழுவதும் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் வெவ்வேறு பின்னணிகள் சார்ந்து சிற்றிதழ்கள் நடத்திய அதிகம் வெளித் தெரியாத ஆளுமைகள் தங்கள் அனுபவங்களை இப்புத்தகத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். முதியோர் காவலன் ஆசிரியர் சங்கொலி பாலகிருஷ்ணன், இனிய ஹைக்கூ நடத்திய மு. முருகேஷ், தாழம்பூ நடத்திய எம்.எஸ். கோவிந்தராஜன் உள்ளிட்ட பல சிற்றிதழ் ஆசிரியர்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் வலம்புரி லேனா. ஆவண மதிப்பு கொண்ட நூல் இது. -அழகு தெய்வானை. நன்றி: தி இந்து, 25/4/2015.