கொங்கு வேளிர் மரபு
கொங்கு வேளிர் மரபு, எஸ்.ஆர்.சுப்ரமணியம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 263, விலை 200ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-431-6.html காவிரியால் பாசனம் செய்வித்த இளைய நாயக்கர். கொங்கு நாடு மிகத் தொன்மையான வரலாறு உடையது. சங்ககாலம் துவங்கி, இன்று வரையும் தனித்ததோர் அடையாளத்தோடு, விளங்கி வந்துள்ளது. அத்தகைய கொங்கு நாட்டின் பெருமையையும், மேன்மையையும் உணர்த்தும் வகையில், பல்வேறு சான்றாதாரங்களோடு, நூலாசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். இதை ஒரு வரலாற்று ஆவணமாக படைத்திருப்பது இதன் தனித்தன்மையை காட்டுகிறது. அரிதின் முயன்ற சேகரித்து தொகுத்து, தந்துள்ள தகவல்களுக்காக நூலாசிரியரை பாராட்டலாம். கொங்கு வேளாளர்களின் சமூக நிகழ்வுகளை, அகச்சான்றுகள் வழியேயும், புறச்சான்றுகள் வழியேயும் நடுநிலையோடு உணர்த்தி உள்ளார். கொங்கு என்றால் பொன் என்று பொருள் உண்டு. கொங்கு நாட்டில் பொன் மிகுதி என்று கூறும் இவர், கோலார் பகுதி கூட பரழைய கொங்குநாடுதான் (பக். 59) என்று கூறுகிறார். சங்ககாலத்தில் கொங்கு நாட்டில் வாழ்ந்தோர் கொங்கர் என்று அழைக்கப்பட்டனர். கொங்கர்களே கொங்கு வேளாளர்கள் (பக். 60) என்ற குறிப்பையும் தருகிறார். கொங்கு நாட்டின் எல்லைகளை பற்றி, விரிவான விளக்கத்தை இந்த நூலில் காண முடிகிறது. தொல்காப்பியர் இயற்பெயர்ப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டும் ஆதன், பூதன் போன்ற பெயர்கள் கொங்கு வேளிர் குலப்பெயர்கள் (பக். 72) என்று சுட்டியிருப்பது கவனத்திற்குரியது. சிலப்பதிகாரத்தில் கொங்கச் செல்வி என்றும், கொங்கர் களம், கொங்கிளங்கோசர் என்றும் வருவதை எடுத்துக்காட்டியிருப்பது அகச்சான்றாக, இலக்கியத்தின் வழியே கொங்கு என்ற வழக்காறு இருந்திருப்பதை அறிய முடிகிறது. காவிரியின் தோற்றத்திற்கு காரணமே கொங்கு நாடுதான் என, கொங்கு மண்டல சதக நூல் சுட்டுவதை எடுத்துக்காட்டியிருப்பதோடு, காவிரியால் எந்த பயனும் கொங்கு நாட்டிற்கு இல்லையெனினும், இளைய நாயக்கர் என்பவர், காவிரி நீரை கொண்டு, கொங்கு நாட்டில் பாசனம் செய்வித்தவர் என்ற செய்தியை இந்த நூலில் பதிவு செய்திருப்பது நோக்குதற்குரியது (பக். 82). கொங்கு வேளாளர்கள் ஆற்றிய தமிழ்த்தொண்டு பற்றிய தகவல்களை, அரிதின் முயன்று தொகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நூலின் இறுதியில், அண்ணன்மார் கதையை பற்றி சுட்டியிருப்பது பாராட்டிற்குரியது. விடுதலை வேள்வியில் கொங்கு வேளாளர் ஆற்றிய பணிகள் பற்றிய குறிப்பும் போற்றத்தக்கது. இந்த நூல் கொங்கு வேளிர் பற்றிய சிறந்த ஆவணமாக திகழ்கிறது. -ராம. குருநாதன். நன்றி: தினமலர், 3/5/2015.