51 அட்சர சக்தி பீடங்கள்
51 அட்சர சக்தி பீடங்கள், ஜபல்பூர் ஏ. நாகராஜ சர்மா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 710, விலை 400ரூ.
சிவனின் பேச்சை மீறி தட்சனின் யாகத்திற்குச் செல்கிறார் தாட்சாயிணி. அங்கு தந்தையான தட்சனால் அவமானம் நேர்கிறது. கொழுந்து விட்டெரியும் யாகத் தீயில் பாய்ந்து தன்னுயிரை விடுகிறார். செய்தி அறிந்த சிவபெருமான், தீ தீண்டாத உயிரற்ற உடலாய்க் கிடந்த தாட்சாயிணியின் உடலைத் தன் தோள்மீது தூக்கிப் போட்டுக் கொண்டு மிக உக்கிரமாக பித்துப் பிடித்தவர் போல் கூத்தாடுகிறார். அச்சமயம் தேவியின் உடல் பல கூறுகளாக இந்த பாரத தேசத்திலும், இப்பூவுலகின் பல இடங்களிலும் விழுந்தன. அவ்விடங்களே 51 சக்தி பீடங்களாயின. உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்தை அட்சரங்களாகக் கொண்டு இயங்கும் இந்த சக்தி ஆலயங்களை வரிசைப்படுத்தி, அதன் உட்கருத்தைச் சொல்லியிருப்பது மெய்சிலிர்க்கச் செய்கிறது. அஸ்ஸாம், கௌஹாத்தியில் கோயில் கொண்டிருக்கும் காமாக்யா தேவியின் ஆலயமே முதல் சக்தி பீடம் என்று தொடங்கி, முதன் முதலில் வேத மந்திரங்கள் அரங்கேறிய குருக்ஷேத்திரம் காத்யாயினி தேவி ஆலயம், காளியின் பயங்கர ரூபத்தையும் மீறிய கோர ரூபமான சின்னமஸ்தா தேவி தசமகா வித்தைகளில் ஆறாவது வித்தையாக அறியப்படுவதன் விளக்கம் என, இமயம் முதல் குமரி வரை அமைந்துள்ள தேவியின் சக்தி பீடங்களை அழகாக வரிசைப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். காட்மண்ட்டுவிலுள்ள அம்பாள் மகாமாயா பீடம் மற்றும் தேவி குமாரிகளாக விளங்கும் சிறுமிகளை வழிபடும் முறை, பங்களாதேஷ், பலுகிஸ்தானில் உள்ள சக்தி பீடங்களை எல்லாம் நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இந்நூலாசிரியர். நன்றி: தினமணி, 4/5/2015.