லண்டாய்
லண்டாய், ச. விஜயலட்சுமி, தடாகம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ.
லண்டாய் எனும் போர்வாள் மாறுபட்ட, வீரிய மிக்க ஒரு கொள்கை மேலோங்கும்போது ஆதிக்க வெறி, ஆக்கிரமிப்புகளெல்லாம் தூளாகி, சுயசார்புள்ள ஒரு நாடாக ஒருநாள் ஆப்கன் மாறலாம். ஆனால் அந்நாட்டுப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஆக்கிரமிப்பு? விடை தெரியாத கேள்வி இது. ஆப்கன் பெண்களின் துயர வாழ்வு வாய்மொழிப் பாடல்களாகவும், கவிதைகளாகவும் பதிவாகிக் கிடக்கிறது. அதுதான் லண்டாய். மிகத் தொன்மையான இலக்கியம். உரிமைகைள நிலைநாட்டப் போராடும் ஆப்கன் பெண்களுக்கான கைவாள். திட்டமிட்டுப் பெண்களைச் சமயலறைக்குள் அடைத்தாலும் சமூக மாற்றத்துக்கான கவிதைகளை அவர்கள் சத்தமின்றி சமைத்துகொண்டேதானிருக்கிறார்கள். ஆப்கன் பெண்களின் வாய்மொழிக் கவிதைகள் முதல் முறையாகத் தமிழுக்கு வந்திருக்கின்றன. உறவுகளுக்குத் தெரியாமல் தொலைபேசியில் லண்டாயைப் பதிவு செய்யும் மிர்மன் பஹீர் அமைப்பும் மீனா முஸ்காவின் அவஸ்தையான சூழலும் உயிரோட்டமுள்ள அவளது கவிதையும், மனதை உலுக்கும் ஸர்மினாவின் தற்கொலையும் உண்மைகளைத் தேடி பயணப்படும் எலீசாவும், கவிதைகளை பதிவு செய்யும் அமைலும் என் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலுக்கான விறுவிறுப்புடன் லண்டாய் வந்திருக்கிறது. மலாலாய் சோயாவின் தரிசனமும் அப்படியே. ஆப்கன் பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் ஒரு விடியலுக்கான காத்திருப்பில் நம்மையும் இணைக்கிறார் நூலாசிரியர் விஜயலட்சுமி. -பா. அசோக். நன்றி: தி இந்து, 2/5/2015.